“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“ என்பார்கள். அதற்கேற்ப தான் நம்முடைய முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை நடத்தி வந்தனர். ஆனால் இன்றைக்கு உள்ள தலைமுறையினரிடம் நல்ல உணவுப் பழக்கம் என்பது கிடையாது. இதனால் தான் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுகளால் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல உடல் நல பிரச்சனைகளையும் நாம் சந்திக்க நேரிடுகிறது. அதிலும் தற்போது க்காலம் மற்றும் குளிர்காலம் ஆரம்பித்து விட்டதால் பலவிதமானத் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சூழலில் வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அவை என்னென்ன என்பது? குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்…
ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருள்களில் முக்கியமானது ஆரஞ்சு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிட்ரஸ் பழமான ஆரஞ்சில், உடலின் முக்கிய பாதுகாப்பு அமைப்பான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. இதோடு கொலாஜனை அதிகரிக்கவும், சரும பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 53.2 மில்லிகிராம் வைட்டமின் சி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ப்ரோக்கோலி: இலைக்காய்கறியான ப்ரோக்கோலி வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதோடு நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கேல் கீரை: கேல் கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் கேல் கீரையில் 120 mg வைட்டமின் சி இருப்பதாக கூறப்படுகிறது. இதோடு வைட்டமின்கள் ஏ, கே மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களும் உள்ளது.
ஸ்ட்ராபெர்ரிகள்: வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் நிறைந்துள்ள பழங்களில் ஒன்று தான் ஸ்டராபெர்ரிகள். இந்த பழங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு புற்றுநோய், நீரழிவு நோய், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் கிட்டத்தட்ட 90 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இதோடு மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
தக்காளி: தக்காளியில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதோடு பொட்டாசியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற பிற ஊட்டச்சத்துகள் இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதோடு பச்சை மிளகாய், கிவி பழம், எலுமிச்சை,கொத்தமல்லி போன்ற உணவுப் பொருள்களிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
No comments:
Post a Comment