Search

நீங்கள் வெயிட் போடுறீங்க என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும் 8 அறிகுறிகள்..!

 உடலின் ஆரோக்கியம் பல வழிகளில் கணக்கிடப்படுகிறது. ஒருவருக்கு மோசமான ஆரோக்கியம் இருப்பதை வெளிப்படுத்தும் ஒன்று உடல்பருமன். ஆம், ஒபிசிட்டி என்று குறிப்பிடப்படும் உடல்பருமன் அதிகப்படியான உடல் எடை மற்றும் உடலில் இருக்கும் அதிக கொழுப்பின் நிலை (கொழுப்பு திரட்சி) என வரையறுக்கப்படுகிறது. அதிக எடை மற்றும் உடல் பருமன் என்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடியது.

ஒருவரது BMI 25-க்கும் மேல் இருந்தால் அதிக எடை என்றும், அதுவே 30-க்கு மேல் இருப்பது உடல் பருமனாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற எடையை விட சுமார் 20%-க்கும் அதிகமான எடையை கொண்டிருப்பது ஒபிசிட்டி எனப்படுகிறது. பொதுவாக கடுமையான உடல் பருமன் என்பது உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், சில வகையான புற்றுநோய்கள், பக்கவாதம், பித்தப்பை நோய், ஆஸ்துமா, ஸ்லீப் அப்னியா, சிறுநீரக கற்கள், மலட்டுத்தன்மை மற்றும் மூட்டுவலி போன்ற அபாயங்கள் ஏற்பட வழிவகுக்கும். அசாதாரண கொலஸ்ட்ரால் அளவுகளை உடல்பருமன் அதிகமாக்கும் என்பதால் தான் உடல்பருமன் இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான ஆபத்து காரணியாக இருக்கிறது.

இந்த நோய்களை தவிர ஒருவரின் மன ஆரோக்கியத்தையும் ஒபிசிட்டி பாதிக்கிறது. எனவே உடல் பருமனின் அறிகுறிகள் அதிகப்படியான உடல் கொழுப்பிற்கும் அப்பாற்பட்டவை. சில அறிகுறிகள் தீவிர நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம், அவை உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கலாம். உடல் பருமன் ஏற்பட பொதுவாக மரபணு, உடலியல், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆரோக்கியமான டயட் மற்றும் சீரான உடல் செயல்பாடுகள் மூலம் எடையை கட்டுக்குள் வைக்கலாம். இதனிடையே BMI மூலம் ஒருவர் தனது வெயிட் லெவலை அறிந்து கொள்ளும் முன், அதிக எடையுடன் இருப்பதை அளவிடுவதற்கான மருத்துவ அறிகுறிகளை ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளதாக பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் சைதாலி குறிப்பிட்டுள்ளார்.

ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி ஒருவர் கவனிக்க வேண்டிய உடல் பருமனின் முக்கிய ஆரம்ப அறிகுறிகள் கீழே:

- அடிக்கடி அதிகமாக தாகம் எடுப்பது

- மூச்சிரைப்பது மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

- ஒருநாளில் பலமுறை சோர்வாக உணர்வது

- வழக்கத்தை விட உடலில் இருந்தது வியர்வை அதிகமாக வெளியேறுவது

- இரவு தூங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இதன் தொடர்ச்சியாக பகல்நேரத்தில் தூக்க கலக்கமாகவே இருப்பது

- உடல் துர்நாற்றம்

- நன்றாக சாப்பிட்டாலும் கூட அதிகப்படியான பசியை உணர்வது

- பாதகமான மனநல விளைவுகள் காரணமாக ஏற்படும் மாயை உணர்வு

உடல் பருமன் இருக்கும் ஒருவர் தனது எடையைக் குறைப்பது மிகவும் சவாலான விஷயம். எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் ஒருவர் டயட்டில் ஃபைபர் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். பர்கர், பீட்சா, வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், குக்கீஸ் அல்லது கேக்ஸ் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், மதுபானங்கள், புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் சைதாலி.

 Click here to join whatsapp group for daily health tip


0 Comments:

Post a Comment