ஒரு வருடத்திற்கு 1.25 பில்லியன் மக்கள் 5.9 பில்லியன் லிட்டர் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் ( soft Drinks ) குடிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் ஒரு நபரின் சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் அதிகம் என்பது தெரிய வருகிறது. ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது 20 பேரில் ஒருவர்தான் குடிக்கிறார்கள் என்கிறது அதே புள்ளி விவரம். எதுவாயினும் இந்தியாவை பொருத்தவரை சோடா பானங்கள் குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.
ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு என்கிறது பல ஆய்வுக்குறிப்புகள். அதாவது தொடர்ச்சியாக கோலா போன்ற சோடா பானங்களை குடிப்பதால் பல வகையான பாதிப்புகளை அனுபவிக்கூடும். இப்படி அதிக ஆபத்து நிறைந்த சோடா பானங்களால் வரும் பக்கவிளைவுகள் என்னென்ன பார்க்கலாம்.
பற்சிதைவை உண்டாக்கும் : தொடர்ச்சியான சோடா குடிக்கும் பழக்கம் பற்களுக்கு சேதத்தை உண்டாக்கும். அதாவது பற்களை அரிப்பது , மஞ்சள் நிறமாக மாற்றுவது, பல் கூச்சம் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
அதாவது , பொதுவாகவே உங்கள் வாயில் Streptococcus mutans என்னும் சர்க்கரையை உண்ணும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை உங்கள் பற்களின் கடினமான பற்சிப்பியை உடைக்கும் இரசாயனங்களை உருவாக்குகின்றன. பற்சிப்பி அரிப்பு உங்கள் பல்லின் மென்மையான, உள் மையத்தை வெளிப்படுத்தும் போது ஒரு குழி உருவாகிறது. நீங்கள் இனிப்பு அல்லது சர்க்கரை நிறைந்த கார்பனேற்றப்பட்ட சோடாவை குடிக்கும்போது, சர்க்கரையின் தேக்கம் அதிகரித்து பல் சிதைவுக்கு வழிவகுக்கும்.
நெஞ்சு எரிச்சலை தரும் : கார்பனேற்றப்பட்ட சோடாக்களில் கார்பன் டை ஆக்சைட் கலக்கப்படுகிறது. இது கதகதப்பான வெப்பநிலையில் உள்ள உங்கள் வயிற்றுக்குள் செல்லும்போது வாயுவாக மாறுகிறது. எனவே இதுபோன்ற கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை உட்கொள்வதால், கார்பன் டை ஆக்சைடு வாயு குவிந்து ஏப்பம் வரக்கூடும். அப்படி நீங்கள் தொடர்ச்சியாக ஏப்பம் விடும்போது உணவு மற்றும் வயிற்று அமிலம் உங்கள் உணவுக் குழாயில் மேலெழும்பும், இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் உங்கள் வாயில் புளிப்புச் சுவையை உண்டாக்கும்.
உடல் பருமன் வரலாம் : அதிக சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் அதிக கலோரிகளை உள்ளடக்கியவை என்பதால் நீங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம். 2007 ஆண்டு American Journal of Public Health என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களில் அதிக சர்க்கரை இருப்பதால் உடல் பருமனை உண்டாக்கும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் இந்த ஆபத்து ஆண்களை காட்டிலும் பெண்களுக்குதான் அதிகம் எனவும் எச்சரித்துள்ளது. அப்படி உடல் பருமனால் பாதிக்கப்பட்டால் ஆய்வுகளின்படி உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் , எலும்புப்புரை நோய்கள் வரும் ஆபத்துகளும் உண்டு.
குறைந்த ஊட்டச்சத்து : நீங்கள் அதிகமாக சோடா பானங்களை குடித்தால் அது உடலின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து உள்ளடக்கத்தையும் பாதிக்கலாம். இந்த பானங்கள் உங்கள் புரோட்டீன் , ஸ்டார்ச், ஃபைபர் மற்றும் விட்டமின் பி2 போன்ற ஊட்டச்சத்து உட்கொள்ளலை குறைக்கிறது. அதோடு பழங்கள், காய்கறிகளை சாப்பிடும் அளவும் குறைந்துவிடும். காரணம் பழச்சாறு குடிப்பதை காட்டிலும் இவர்களுக்கு சோடா பானங்களை குடிக்கும் பழக்கம்தான் அதிகமாக இருக்கும்.
எலும்பு பலவீனம் : பெண்களுக்கு அதிக கோலா போன்ற கார்பனேற்றப்பட்ட சோடா குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு எலும்புகள் பலவீனமடையும். அதாவது 2006 ஆண்டும் The American Journal of Clinical Nutrition என்னும் இதழில் வெளியிட்ட ஆய்வுக் குறிப்பில் அதிகமாக சோடா குடிக்கும் பெண்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு பலவீனமான இடுப்பு எலும்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இந்த பெண்கள் அனைவரும் கோலா பானங்களை அதிகம் குடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment