பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் குடிக்க விரும்பும் காபி, நாள் முழுவதும் ஒருவரை உற்சாகமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் அளிப்பதை தவிர வேறு பல நன்மைகளையும் காபி கொண்டிருக்கிறது. காபி குடிப்பதை ஊக்குவிப்பது மட்டும் இந்த நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் அல்ல. மாறாக காபி விவசாயிகளின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆதரவளிக்க, நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த நேரத்தில் தினசரி காபியை விரும்பி பருகுவதால் உங்களுக்கு கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
எனர்ஜி ட்ரிங்.! : காபியில் உள்ள காஃபின் நமக்கு எனர்ஜியை தரும் ஒன்றாக இருக்கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதில் காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாக இருக்கிறது. காஃபின் குறிப்பாக கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற கெமிக்கல்களின் சுழற்சியை உடலில் அதிகரிக்கிறது. சிறிய அளவிலான காஃபின் கூட நம்மை உற்சகமாக மற்றும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.
டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது... தினமும் 1 கப் காபி குடிப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 6 சதவீதம் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காஃபின் தவிர காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இதிலிருக்கும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் டைப் 2 நீரிழிவு நோய்களைத் தடுக்கும். காபியில் உள்ள மெக்னீசியம் மற்றும் குரோமியம் போன்ற மற்ற தாதுக்களும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
பார்கின்சன் நோய் அபாயத்தை குறைக்கும்.. பார்கின்சன் நோய் என்பது நரம்பியல் சிதைவுக் கோளாறு. பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு பார்கின்சன் நோயின் அபாயம் குறையும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கூட தினசரி மிதமான அளவு காபி குடிப்பது அவர்களின் இயக்கங்களை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும்.
டிப்ரெஷனை குறைக்கிறது.. காபி மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் போன்ற சிறந்த உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி அடிப்படையிலான வழக்கமான காபி நுகர்வு இன்பம், பாசம், நட்பு, மனஅமைதி மற்றும் அதிக மகிழ்ச்சி போன்ற நேர்மறையான உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே தினசரி குறைந்தபட்சம் ஒரு கப் காபியை பருகுவது டிப்ரெஷன் ஏற்படும் வாய்ப்புகளை 8% வரை குறைக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.. காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொழுப்பு மற்றும் பலவற்றைக் குறைப்பதன் மூலம் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கல்லீரல் பாதுகாப்பு: நம் உடல் காஃபினை ஜீரணிக்கும்போது, அது பராக்சாந்தைன் என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது, இது ஃபைப்ரோஸிஸில் உள்ள வடு திசுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. மேலும் இது கல்லீரல் புற்றுநோய், ஆல்கஹால் தொடர்பான சிரோசிஸ், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் சி உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட உதவும். மொத்தத்தில் தினசரி மிதமான காபி நுகர்வு கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.
இதய நோய் அபாயங்களை குறைக்கிறது.. நாளொன்றுக்கு 2 - 3 கப் காபி குடிப்பது சிறந்த ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இப்பழக்கம் இதய நோய் உட்பட இறக்கும் அபாயத்தை 10-15% குறைத்து உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. நினைவில் இருக்கட்டும், மேற்சொன்னபடி அதிகபட்சம் 3 கப் வரை மட்டுமே தினமும் குடிக்கலாம்.
No comments:
Post a Comment