Search

காலையில் எழுந்துகொள்ளும் போது சோர்வாகவே இருக்கிறதா..? இவையெல்லாம் காரணங்களாக இருக்கலாம்...

 காலையில் எழுந்து கொள்ளும் போது உற்சாகமாகவும், மனம் லேசாகவும் இருந்தால் அந்த நாள் சிறப்பாக இருக்கும். ஆனால் பலருக்கும் சரியான தூக்கமின்மை, போன்ற சில காரணங்களால் காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருக்கும். சோர்வை போக்குவதற்கு சுட சுட டீயோ காபியோ குடித்து அன்றைய நாளை தொடங்குவார்கள். நீங்கள் தினமும் 8 மணி நேரம் நன்றாகத் தூங்கியும், அதற்கு பிறகும் காலையில் சோர்வாக இருந்தால், தொடர்ச்சியாக உங்களுக்கு காலையில் எழுந்து கொள்ளும் பொழுது நீங்கள் சோர்வாகவே உணர்ந்தால் உங்களுடைய பழக்க வழக்கங்களில் பின்வருவனற்றை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அலாரம் அடிக்க அடிக்க ஆஃப் செய்வது :இன்னும் ஒரு 5 நிமிடம் தூங்கலாம், இன்னும் ஒரு 10 நிமிடம் தூங்கலாம் என்று அலாரம் அடிப்பதற்கு முன்பாகவே அல்லது அடிக்கும் பொழுது உடனடியாக அது ஸ்னூஸ் மோடுக்கு மாற்றுவது, காலை நேரத்தில் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் நன்றாக தூங்கி தூங்கி கொண்டிருக்கும் பொழுது அலாரம் அடித்து இடையில் விழித்து மீண்டும் சில நிமிடங்கள் தூங்குவது என்பது வழக்கத்தை விட உங்களை அதிகமாக சோர்வாக்கும். உங்களுடைய ஆழமான தூக்கத்தில் இருந்து நீங்கள் கண்விழித்து விட்டீர்கள், எனவே, மீண்டும் அந்த நிலைக்கு செல்ல முடியாது.

அதிகமாக காஃபி மற்றும் காஃபீன் உள்ள பானங்கள், மதுபானம் :பலருக்கும் காலையில் எழுந்த உடனேயே சுடச்சுட காபி இருக்க வேண்டும்; அந்த அளவுக்கு மிகப்பெரிய ஆற்றலை கொடுக்கும் காபியில் இருக்கும் காஃபீன் உங்களுடைய நரம்பு மண்டலத்தை தூண்டி விட்டு உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால் நீங்கள் தூங்குவதற்கு முன்பு காபி குடித்தால் அது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும், ஆனால் உங்கள் தூக்கம் கெடும். எனவே காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக இருந்தால் காபி குடிப்பதை குறைக்க வேண்டும். அதேபோல மதுபானத்தையும் தவிர்க்க வேண்டும். காபி மற்றும் மதுமானம் இரண்டுமே ஆழமான தூக்கத்தை பாதிக்கிறது. இதனால் நீங்கள் காலையில் சோர்வாகத்தான் எழுந்து கொள்வீர்கள்.

உங்கள் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை, தூக்கத்தின் தேவையை புரிந்து கொள்ளுங்கள் :ஆங்கிலத்தில் இதை Chronotype என்று கூறுவார்கள். ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வேண்டும் என்று இயற்கையாகவே தோன்றிவிடும். அந்த நேரத்தில் நீங்கள் கட்டாயமாக தூங்க வேண்டும். எளிதாக சொல்ல வேண்டுமானால் ஒரு சிலருக்கு இரவு முழுவதும் வேலை செய்து நள்ளிரவுக்கு பின்பு அல்லது அதிகாலை நேரத்தில் தூங்க செல்வார்கள். ஒரு சிலர் காலையில் எழுந்து இரவில் சீக்கிரமாக தூங்கி விடுவார்கள். இவ்வாறு உங்களுடைய உடலுக்கு எந்த நேரத்தில் தூங்கினால் அது சரியாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல நீங்கள் உங்களுடைய தூக்க நேரத்தை நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

நிம்மதியான தூக்கத்தை பாதிக்கும் சுற்றுபுறம் மற்றும் காரணிகள் :பொதுவாகவே ஒரு சிலருக்கு தூங்கும் போது, தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்றே தெரியாது. தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள மாட்டார்கள். இடி இடித்தாலும், பூகம்பமே வந்தாலும் தூக்கம் கெடாது என்று என்ற நிலையெல்லாம் ஒரு வகையில் வரம் தான். ஆனால் ஒரு சிலருக்கு விளக்கு போட்டால், சிறிய சத்தம் கேட்டாலே, தூக்கம் கலைந்துவிடும். எனவே அவ்வாறு மிகவும் சென்சிட்டிவாக இருப்பவர்கள் அமைதியான இடமாக தேர்வு செய்ய வேண்டும். விளக்கின் வெளிச்சம், மொபைலில் இருந்து, எலெக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி, ஆகியவை கூட சில நேரங்களில் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அதேபோல நீங்கள் படுக்கும் மெத்தை, பயன்படுத்தும் தலையணை, ஆகியவை சவுகரியமாக இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.

உங்களுடன் தூங்குபவரால் உங்களுக்குத் தொந்தரவு :உங்கள் சகோதரன், சகோதரி, பெற்றோர்கள் அல்லது திருமணமானவர்களாக இருந்தால், கணவன்/மனைவி என்று உங்களுடன் தூங்குபவர்களால் உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்கள் தூங்காமல் உங்களிடம் பேசிக் கொண்டே தொந்தரவு செய்யலாம். அல்லது, அவர்களுடைய குறட்டையால் கூட உங்கள் தூக்கம் கெடலாம். எனவே அவர்கள் நன்றாக தூங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு அதை செய்யுங்கள், நீங்கள் நிம்மதியாக தூங்கி காலையில் பிரஷ்ஷாக எழுந்து கொள்ள முடியும்.

தூக்கம் சார்ந்த குறைபாடுகள் :மேலே குறிப்பிட்ட எந்த விதமான காரணமும் இல்லை என்றாலும், காலையில் உங்களால் உற்சாகமாக எழுந்து கொள்ள முடியவில்லை என்றால், உங்களுக்கு தூக்கம் சார்ந்த ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.


 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment