சிலவகை மூலிகைகளுக்கு காயங்களை ஆற்றும் தன்மை உண்டு என கேள்விப்பட்டேன்... எந்த மூலிகை, எப்படிப்பட்ட காயத்தை ஆற்றும் என்று சொல்ல முடியுமா?
இவை தீக்காயங்களையும் ஆற்றுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி...
அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது ட்ரைடக்ஸ் புரொகும்பென்ஸ் (Tridax procumbens) எனப்படும் சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்தது. இந்தச் செடி வெட்டுக்காயங்கள், சிராய்ப்புக் காயங்கள், ஆறாத புண்கள் போன்றவற்றை ஆற்றும் என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தச் செடியில் ஆன்டிஇன்ஃப்ளமேட்டரி தன்மையும், காயத்தை ஆற்றும் தன்மையும் உண்டு. ஒரு புண் ஆற வேண்டுமென்றால் அதைச் சுற்றி ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அந்தத் தன்மையும் இந்தச் செடியில் உண்டு என்பதால் விரைவாக புண்ணை ஆற்றுகிறது. காயம் ஏற்பட்டால் அதிலிருந்து ரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுத்து, புண்ணை சீக்கிரம் ஆற்றுவதற்கான செயலைச் செய்கிறது.
மிக முக்கியமாக காயம் ஆறினாலும் அந்த இடத்தில் வடுவோ, தழும்போ ஏற்படாதபடி பார்த்துக்கொள்வதிலும் இந்த மூலிகைக்குப் பங்கு உண்டு. வெட்டுக்காயமே ரத்த நாளங்களை பாதிக்கும் அளவுக்கு ஆழமாக இருப்பின் மூலிகை வைத்தியமெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. உடனே அவசர சிகிச்சை மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் ரத்தப்போக்கு அதிகம் வெளியேறும். பிளேடு, கத்தி போன்றவை வெட்டி ஏற்படும் லேசான காயங்களுக்கும், கீழே விழுவதால் ஏற்படும் சிராய்ப்புக்காயங்களுக்கும் மட்டுமே மூலிகை சிகிச்சை உதவும்.
நீங்கள் கேட்டுள்ள தீக்காயத்துக்கு உடனடியாக எமர்ஜென்சி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அந்தக் காயம் ஆறிவரும்போது, வெட்டுக்காய்ப் பூண்டின் இலைகளை அரைத்துப் பற்றுப்போட்டால் காயத்தால் ஏற்படும் தழும்பைத் தவிர்க்கலாம். புண்ணை சீக்கிரம் ஆற்றவும் உதவும்.
No comments:
Post a Comment