மேல் வயிற்றுப் பகுதியில் வலி எடுப்பது அஜீரனம், வாயுத்தொல்லை போன்ற சாதாரண வலி கிடையாது. தீவிரத்தன்மை கொண்ட உடல்நலப் பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம். குறிப்பாக, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.
இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலும் மக்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள். ஆகவே, இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டால், அதற்கேற்ப நாம் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். மேலும், வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றி கொள்ள முடியும்.
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்றால் என்ன..?
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகுவதற்காக குடலில் அமிலம் சுரக்கும். இந்த அமிலமானது நமது உணவுக் குழாயை நோக்கி வராமல் இருக்க ஸ்பின்ஸ்டர் என்னும் வால்வு இருக்கும். இது தளர்வடையும் பட்சத்தில் அமிலமானது உணவுக் குழாயை நோக்கி மேலெழும்பி வரும். அதைத்தான் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று சொல்கிறோம். இதுவே அடிக்கடி ஏற்படுமாயின், அதை ஜெர்டு என்று குறிப்பிடுகின்றனர்.
பித்தப்பை கல் என்றால் என்ன..?
நமது வயிற்றின் வலது புறத்தில் இருக்கக் கூடிய சிறிய உறுப்புதான் பித்தப்பை. கல்லீரலுக்கும் கீழே இருக்கிறது. செரிமானத்திற்கு தேவையான பைல் என்னும் திரவம் இதில் சுரந்து அங்கிருந்து சிறுகுடலுக்கு வரும். அந்த செரிமான திரவமானது படிந்து நாள்பட ஒரு கல் போல உருவாகிவிடும். பெரும்பாலும் ஆரம்ப காலத்தில் இது எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. பெரிய அளவுக்கு தொந்தரவு ஏற்படாது. ஆனால், பிரச்சினை தீவிரமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டியிருக்கும்.
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் மற்றும் பித்தப்பை கல் இடையே உள்ள ஒற்றுமை
இந்த இரண்டும் வெவ்வேறான நோய்கள் என்றாலும் அறிகுறிகள் ஒன்றுபோல இருக்கின்றன. சாதாரணமாக இந்த அறிகுறிகளின் வேறுபாடு என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் தவறான சிகிச்சையை நீங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.
எங்கு வலி ஏற்படும்..?
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினை இருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு முதல் நெஞ்சு வரையில் எரிச்சல் உண்டாகும். உணவுக் குழாயின் அடிப்பகுதியான ஸ்பின்ஸ்டர் வால்வு தளர்வதன் காரணமாக கீழ் பகுதி நெஞ்சு எலும்புகளை ஒட்டி வலி அதிகமாக இருக்கும்.
இதேபோல பித்தப்பை கல் பிரச்சினைக்கும் மேல் வயிற்றில் வலி ஏற்படும் என்றாலும், அது வலது புறமாக இருக்கும். நெஞ்சு அல்லது இடுப்பு பகுதி வரையிலும் வலி பரவும்.
வலி எப்படி இருக்கும்..?
குனிவது, வளைவது போன்ற சமயங்களில் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக வரும் வலி அதிகமாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆண்டசிட் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், பித்தப்பை கல் பிரச்சனையால் ஏற்படும் வலி என்பது நீங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளீர்களோ, அந்த அளவுக்கு தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும்.
நேர கணக்கீடு முக்கியம்
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக ஏற்படும் வலி என்பது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரையில் நீடிக்கலாம். கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடும்போதும், வயிறு முட்ட சாப்பிடும்போதும் வலி உண்டாகும். பித்தப்பை கல் வலியும் சாப்பிட்ட பிறகு ஏற்படும் என்றாலும், அது உடனடியாக தோன்றுவதில்லை. ஆனால் 5 மணி நேரம் வரையிலும் கூட நீடிக்கும்.
வயிற்று வலிக்கு வேறு காரணம்
பித்தப்பை கல் இருப்பவர்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலமாக அது உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுடைய வயிற்று வலிக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக இருக்கலாம். இதனால் தான் சிலருக்கு பித்தப்பை கல் அகற்றிய பிறகும் கூட வயிற்று வலி நீடிக்கிறது. அதேசமயம், ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலமாக இந்த இரண்டையுமே தவிர்க்க முடியும்.
No comments:
Post a Comment