மழைக்காலத்தில் நோய்த் தொற்றுகள் எளிதில் பரவும். பருவ மாற்றத்தால் உடல் நலக் குறைவு, சளி போன்ற பிரச்னைகளும் வரும். இவற்றைத் தடுக்க முடிந்த அளவு உடலைப் பராமரிப்பது அவசியம். குறிப்பாக உணவுகள் மூலமும் நோய்த் தொற்று வெகுவாகப் பரவும் என்பதால் உணவில் கவனமாக இருப்பது அவசியம்.
கடை உணவுகளில் கவனம் : சளி, உடல் நலக் குறைவு மற்றவர்களுக்கு இருந்தாலும் அவைக் காற்றின் மூலம் பரவும். எனவே நீண்ட நேரம் வெளியே வைத்த உணவுகள், தெருக்களில் விற்கும் பழங்களை வாங்கி உண்பதைத் தவிர்க்கவும். வீட்டிலும் உணவுகளை திறந்து வைக்காமல் மூடி சூடு படுத்தி உண்ணவும். நீரையும் கொதிக்க வைத்துக் குடியுங்கள்.
எண்ணெய்யில் பொறித்த உணவுகள் : மழைக்காலங்களில் எண்ணெய்யில் பொறித்த சூடான உணவுகளை சாப்பிடத்தான் வாய் தூண்டும். எப்படியாவது சூடாக டீ அதோடு ஒரு சமோசா சாப்பிட்டால்தான் மழைக்காலம் திருப்தியாகக் கழியும். அனால் அவ்வாறு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. காரணம் மழைக்காலத்தில் ஜீரண சக்தி மிகக் குறைவாக இருக்கும். அந்தசமயத்தில் இப்படி பொறித்த உணவுகளை டம் கட்டி சாப்பிட்டால் அது ஜீரணமாக நேரம் அதிகமாகும். இதனால் நெஞ்சு எரிச்சல், வயிறு மந்தத் தன்மை , வயிறு கோளாறு போன்ற உபாதைகளை சந்திக்க நேரிடும்.
கடல் சார் உணவுகள் : கடல் சார் உணவுகளை மழைக்காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் மழைக்காலம்தான் கடல் உயிரினங்களுக்கு இனப்பெருக்கக் காலம். அப்போது அவற்றின் வயிற்றில் முட்டைகள் இருக்கும். அவற்றை சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும் அல்லது அவை விஷமாகவும் மாறலாம்.
கீரை வகைகள் : கீரைகள் சத்தானது என்பதில் ஐயமில்லை. ஆனால் அவற்றை மழைக்காலத்தில் உண்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். ஏனெனில் அவை மண்ணில் விளைவதால் கிருமிகள் இலைகளில் தொற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும். அவற்றை உண்பது உடலுக்குக் கேடு. கீரை மட்டுமன்றி காலிஃப்ளவர், கோஸ் போன்றவற்றையும் மழைக்காலத்தில் தவிர்க்கலாம்.
காளான் : காளான் மண்ணில் குறிப்பாக மழைக்காலத்தில் தளதளவென வளரக் கூடியது. இருப்பினும் அவற்றை மழைக்காலத்தில் உண்பது சரியல்ல. காரணம் மழைக்காலத்தில் காளானை பாக்டீரியாக்கள் வெகுவாகத் தாக்கும். அவற்றை என்னதான் சுத்தம் செய்து சாப்பிட்டாலும் அந்த பாக்டீரியாக்கள் தாக்கும் ஆற்றல் கொண்டது. வீட்டில் சமைப்பது மட்டுமல்லாமல் கடைகளில் காளான் வாங்கி உண்பதையும் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment