Search

உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும்

 சாப்பிட வேண்டியவை, கூடாதவை!

'எக்சர்சைஸ் செஞ்சுட்டு வந்தவுடனே, சர்க்கரைப் பொருள்கள், கேக், ஜூஸ் போன்றவற்றை உட்கொண்டால், செய்த உடற்பயிற்சிக்கான பலன் கிடைக்காது' என ஒரு கருத்து இருக்கிறது. `இது உண்மைதான்' என்கிறது மருத்துவம். தவிர்க்கவேண்டிய பொருள்களின் பட்டியலில், சர்க்கரையைப் போலவே வேறு சில உணவுப் பொருள்களும் இருக்கின்றன. அந்த வகையில், உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும் சாப்பிடக் கூடாதவை, சாப்பிடவேண்டியவை, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், உணவுக்கும் உடற்பயிற்சிக்குமான இடைவெளி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

``வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்பவர்கள் என இரண்டு வகையினர் இருக்கிறார்கள். வீட்டிலேயே பயிற்சி மேற்கொள்கிறவர்களில் சிலர், சாப்பிட்டவுடனேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிடுவார்கள். ஜிம்மில் வொர்க்-அவுட் செய்பவர்கள் சிலர் காலை எழுந்ததுமே ஜிம்முக்குக் கிளம்பிவிடுவார்கள். இவர்
களெல்லாம் உடற்பயிற்சிக்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவில் அக்கறை காட்டுவதில்லை.

உடம்பில் எனர்ஜி இல்லாமல், உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. உண்மையில் தசை, தொடை போன்ற பகுதிகளுக்கான பயிற்சி செய்பவர்களிலிருந்து, மன அமைதிக்காக மெடிடேஷன் செய்பவர்கள் வரை அனைவருக்கும் அவரவர் செய்யும் பயிற்சிக்கேற்ப எனர்ஜி தேவை.

உடற்பயிற்சிக்கு முன்னர்...

சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜெட்டிக்காக இருக்கும். அந்த வகையில், வொர்க்-அவுட் செய்வதற்கு முன்னர் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே...

ஆப்பிள் ஆரஞ்சு பேரிக்காய் பப்பாளி பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி ஓட்ஸ் தயிர் கிரீன் டீ நட்ஸ்.

உடற்பயிற்சிக்குப் பின்னர்...

உடற்பயிற்சி செய்யும்போது, உடலிலிருக்கும் சக்தி அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பின்னர் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எளிதில் விழுங்கக்கூடிய, அதிகம் மென்று சாப்பிட அவசியமில்லாத உணவுகளாக இருக்க வேண்டும். பொதுவாக, உடற்பயிற்சி செய்து முடித்ததும் பலரும் எனர்ஜிக்காக எலெக்ட்ரோலைட்ஸ், புரோட்டீன் டிரிங்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அவர்கள், அவற்றுக்குப் பதிலாக தண்ணீர் இளநீர் வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

வொர்க்-அவுட் செய்யும்போது, உடலிலிருக்கும் அமினோ அமிலம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால், அமினோ அமிலம் அதிகமிருக்கும் உணவுகளை உட்கொள்ளலாம். தசைக்கான வலிமையை அதிகரிப்பதில் அமினோ அமிலத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அந்த வகையில், அவித்த முட்டை, தயிர், மோர், பால் போன்றவற்றை உட்கொள்வது மிக நல்லது. கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட வேண்டும்.

நேரத்தில் கவனம்!

செரிமானத்துக்குப் பிறகுதான், தேவையான சக்தி உடலுக்குக் கிடைக்கும் என்பதால், 20 - 30 நிமிடங்களுக்குள் செரிமானம் ஆகக்கூடிய வாழைப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்ளவும். உடற்பயிற்சி செய்யப் போவதற்கு, 40 முதல் 60 நிமிடங்களுக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம், மிகவும் மதிப்புவாய்ந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் தசைகள் சத்துக்காகக் காத்திருக்கும். அப்போது சாப்பிடும் உணவு, நீங்கள் செய்த உடற்பயிற்சியை முழுமையாக்கி, உடல் வலிமைக்கு வலுசேர்க்கும்.

உடற்பயிற்சி செய்து முடித்த 20 நிமிடங்களுக்குள் ஏதாவதொரு ஹெல்த்தி ஸ்நாக்ஸைச் சாப்பிட வேண்டும். அதிகபட்சம் 3 முதல் 4 மணி நேரத்துக்குப் பிறகு, உணவு உட்கொள்ளலாம்.
தண்ணீர் அவசியம்! உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சியின்போது, ஒவ்வொரு 15 - 20 நிமிடங்களுக்கும் சிறிது தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலும் பயிற்சி செய்யும்போது அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் வேக வேகமாக தண்ணீர் அருந்திவிடாமல், கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.

ஃபிட்னெஸுக்கான பொது அறிவுரைகள்...

சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிடுங்கள்.
முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும்.
அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) உட்கொள்ளலாம். முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாகச் சாப்பிடுங்கள்.

முதன்முறையாக உடற்பயிற்சி செய்யும் சிலர், வார்ம்-அப் செய்யாமல் நேரடியாகப் பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. வார்ம்-அப் செய்யாமல், பயிற்சியைத் தொடங்கவேண்டாம். புதிதாக ஜிம் போகும் சிலர், ஆர்வத்தில் அளவுக்கதிகமாக பயிற்சி செய்துவிடுவதுமுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பயிற்சி நேரத்தையும், பயிற்சி முறைகளையும் அதிகப்படுத்துங்கள். அதுதான் உடலுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல்லது'' என்கிறார் சுதர்சனா.


Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment