இதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியப்பட்டாலும் அல்லது கண்டறியப்படாத நிலையிலும், இதயத்தின் செயல்பாடு திடீரென்று நின்று போவதைத்தான் கார்டியாக் அரெஸ்ட் என்று குறிப்பிடுகின்றனர். இதனை சில அறிகுறிகள் மற்றும் எச்சரிக்கைகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும்போது உடல் எத்தகைய மாற்றங்களை வெளிப்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உடனடி மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ உதவியின் மூலமாக மதிப்புமிக்க மனித உயிரை காப்பாற்ற முடியும்.
அதே சமயம், கார்டியாக் அரெஸ்டுடன் தொடர்புடைய முதுகு வலி ஒன்றை மட்டுமே அதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்றால் நிச்சயமாக இல்லை. இதனுடன் பிற அறிகுறிகளும் சேர்ந்து வரும்.
கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?
ஹார்ட் அட்டாக் அல்லது இதய செயலிழப்பு ஆகியவற்றை தொடர்ந்து கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும். இதயத்திற்கு செல்லும் முக்கிய ரத்த நாளங்களில் திடீரென்று அடைப்பு ஏற்படுவது அல்லது இதயத்தின் மின்னியக்க செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது ஆகியவற்றை தொடர்ந்து கார்டியாக் அரெஸ்ட் நிகழும்.
கார்டியாக் அரெஸ்ட்கான பொதுவான அறிகுறி முதுகு வலி ஆகும். இதனுடன் முன், இடது அல்லது வலது தோள்பட்டை வலி, இடது கை வலி, வலது கை வலி, மேல் தாடை, கழுத்து வலி, இரண்டு தோள்பட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.
எந்த வயதினருக்கும், எப்போது வேண்டுமானாலும் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனினும் மிதமான வலி அல்லது அசௌகரியம் மூலமாக இது நிகழ இருப்பதை தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, வழக்கத்திற்கு மாறான முதுகு வலி ஏற்படும்போது அதனை அலட்சியம் செய்யக் கூடாது என்று தெரிவிக்கின்றனர்.
முதுகுவலியை வேறுபடுத்தி பார்ப்பது எப்படி?
சாதாரண முதுகு வலி அல்லது கார்டியாக் அரெஸ்ட் தொடர்புடைய முதுகு வலி, இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். மேல் முதுகுப் பகுதியில் மிகக் கடுமையான வலி ஏற்படுவது கார்டியாக் அரெஸ்ட்க்கான அறிகுறி ஆகும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் இந்த அறிகுறிகள் மிக அதிகமாக தென்படும் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் முதலில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இசிஜி, எக்கோ, டிஎம்டி போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதை செய்தால் மட்டுமே அது சாதாரண முதுகு வலியா அல்லது கார்டியாக் அரெஸ்ட்க்கான அறிகுறியா என்பது தெரியவரும்.
தடுப்பு நடவடிக்கைகள் :
தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் ஆகியவை நம் வாழ்வியலில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் ஆகும். இதுதவிர அவ்வபோது ரத்த அழுத்தப் பரிசோதனை, பிற இதய பரிசோதனைகள் போன்றவற்றை அவ்வபோது செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment