டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? - Agri Info

Adding Green to your Life

October 25, 2022

டிஜிட்டல் ஸ்கிரீன்களில் மூழ்கியிருக்கும் உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

 இன்றைய சூழலில் டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்படுத்தாத நபர்கள் உண்டா? அப்படி இருந்தால் அபூர்வம் தான். முன்பெல்லாம் அலுவலகப் பணி செய்பவர்கள் மட்டுமே டிஜிட்டல் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. பில்லிங் கவுண்டர் முதல் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் மயம் தான்.

கம்ப்யூட்டர், லேப்டாப் சவகாசமே இல்லாத சாமானிய நபர்கள் கூட மொபைல் ஃபோன்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆக யார் ஒருவரும் டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்க்க இயலாத சூழல் நிலவுகிறது. அதே சமயம், டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பார்ப்பதால் நம் கண்களில் ஏற்படக் கூடிய வறட்சி மற்றும் இதர பாதிப்புகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

ஆண்டுதோறும் உலக அளவில் 2 மில்லியன் மக்கள் கண் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனராம். குறிப்பாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்படுகின்றது. 50 வயதை ஒட்டியவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களில் 66 சதவீதம் பேருக்கு காட்ராக்ட் பிரச்சினை வருகிறது. கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் க்ளகோமா பிரச்சினையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு கூடுதலாக டயபெடிக் ரெடினோபதி என்னும் நோய் உடன் வந்து சேருகிறது. மேற்குறிப்பிட்ட நோய்கள் எல்லாமே கண் பார்வைக்கு சிக்கல் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதால் பார்வை இழப்பு என்பதெல்லாம் ஏற்பட்டு விடாது என்றாலும், கண் வலி மற்றும் வறட்சி போன்றவை ஏற்படும்.

சராசரியாக, ஒரு மனிதனின் கண்கள் நிமிடத்திற்கு 15 முறை இமையை சிமிட்டுகின்றன. ஆனால், டிஜிட்டல் ஸ்கிரீன்களை நாம் வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த சிமிட்டல் வெகுவாகக் குறைந்து விடுகிறது. இதன் எதிரொலியாக கண் வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

என்னதான் தீர்வு

கண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதற்காக இன்றைக்கு நாம் லேப்டாப்களையும், மொபைல் ஃபோன்களையும் ஓரம்கட்டி வைத்து விட முடியுமா? வெறும் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்த காலம் போய் இப்போது நாம் வேலை செய்வதற்கான சாதனங்களாக செல்ஃபோன்களே கூட மாறி விட்டன.

கல்வி பயில, வர்த்தகம் செய்ய என நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்ட டிஜிட்டல் சாதனங்களை நாம் இனி புறம்தள்ள முடியாது. அதே சமயம் நம் கண்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டாக வேண்டும். அதற்குத் தான் 20-20-20 என்ற தீர்வை மருத்துவர்கள் முன்வைக்கின்றனர்.

அதாவது, டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்த்துக் கொண்டிருக்கும்போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை 20 நொடிகளுக்கு 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களின் மீது பார்வையை செலுத்த வேண்டும். இப்படி செய்வதால் நம் கண்களுக்கு வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.


No comments:

Post a Comment