பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகாவும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது உடலை இலகுவாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி நீண்ட ஆயுளுக்கும் வழி வகுப்பதாக ஆய்வுகளே கூறுகின்றன.
அதேபோல் மனித உடல் செயல்பாட்டுக்கு விட்டமின் டி- யை அள்ளிக்கொடுக்கும் சூரிய வெளிச்சம் மிகவும் அவசியம். ஆனால் ஏ.சி சூழ்ந்த உலகில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இப்படி யோகாவும், சூரிய வெளிச்சமும் ஒன்று சேர அமைய வேண்டுமெனில் அதற்கு சூரிய நமஸ்காரம் சிறந்த வழியாக இருக்கும்.
சூரிய நமஸ்காரம் தினமும் செய்வதால் உடலில் பல்வேறு மாற்றங்களை உணர முடியும் என யோகா பயிற்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது சூரிய நமஸ்காரம் வெறும் பயிற்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. அது உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இது சுவாசத்தை ஒருங்கிணைப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஒருவித அமைதியை தரும் பயிற்சியாகும்.
அதுமட்டுமன்றி தசைகளை தூண்டி நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. நிமிர்ந்து நேராக அமர்வதால் முதுகெலும்பு வலு பெறுகிறது. நம் தோற்ற நிலையும் சீராகிறது. அமைதியான சூழலில் இதை செய்யும்போது கெட்ட எண்ணங்கள் நீங்கி மனதளவில் அமைதி நிலவுகிறது.
அக்ஷர் யோகா நிறுவனங்களின் நிறுவனர் ஹிமாலயன் சித்தா அக்ஷர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு அளித்த பேட்டியில் “ சூரிய நமஸ்காரம் சரியான முறையில் செய்தால் 5-10 நிமிடங்களில் சுமார் 20-30 கலோரிகளை எரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இது நீங்கள் எப்படி சுவாசிக்கிறீர்கள் , எந்த மாதிரியான சுவாச முறையை பின்பற்றுகிறீர்கள் என்பதை பொறுத்து குறையும். அதாவது கலோரி உங்கள் வேகத்தின் அளவை பொறுத்து குறையும். எனவே சூரிய நமஸ்காரம் எப்படி செய்ய வேண்டும், சீரான நிலை என்ன என்பதை தெரிந்துகொண்டால் கலோரிகள் எரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.
20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் சராசரியாக 40 முதல் 50 கலோரிகள் வரை குறைக்கலாம். இதற்கு சரியான சுவாச நுட்பத்தை பின்பற்றினால் கலோரிகளின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எனவே சுவாச நுட்பத்தை பொறுத்து கலோரி எரியும் அளவு தீர்மானிக்கப்படுகிறது. எனவே 108 சூரிய நமஸ்காரங்களுக்கு பதிலாக 10 நிமிடங்கள் முழு கவனத்துடன் செய்தாலே போதுமானது. இதற்கு யோகா பயிற்சியாளரின் உதவியையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார் திரிவேதி.
No comments:
Post a Comment