சேலம் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி ஓமலூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் முகாமினை சேலம் மாவட்ட நிர்வாகமும், அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்துகின்றன.
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வேலைவாய்ப்பு முகாமின் முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் வருகைதரும் வேலைநாடுநர்களுக்குத் தேவையான பேருந்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கிட உறுதி செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment