நோய்கள் குறித்து விழிப்புணர்வு கொண்டிருப்பது, அவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்டால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் உதவும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், நோய் குறித்த தகவல்களை முறையான மருத்துவரின் ஆலோசனைகள் அல்லது மருத்துவ ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர, வருவோர், போவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால், மனம்போன போக்கில் ஒவ்வொருவரும் நோய் குறித்த தங்களுடைய தனிப்பட்ட புரிதல்களை உங்களிடம் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில், சர்க்கரை நோய் குறித்த பொதுவான வதந்திகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
பெரியவர்களை மட்டுமே சர்க்கரை நோய் பாதிக்கும் : பொதுவாக உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் என்றாலும் கூட, அதற்காக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு இந்த நோய் வரவே வராது என்பது உண்மை அல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்கமின்மை போன்ற காரணங்களால் இளம் வயதில் கூட இந்த நோய் வரக்கூடும்.
நீரிழிவுக்காண பிரத்யேக உணவுகளை சாப்பிட வேண்டும் : நீரிழிவுக்கான பிரத்யேக உணவுகள் விலை உயர்ந்தவை என்பது மட்டுமல்லாமல், அதனால் சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படுவது உண்டு. ஆகவே, நீரிழிவு நோய்க்கானது என்று லேபிள் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே நீங்கள் சாப்பிட வேண்டும் என்று கிடையாது. முழு தானிய உணவுகள், நார்ச்சத்து மிக்க உணவுகள் போன்றவை இந்த லேபிள் செய்யப்பட்ட உணவுகளை காட்டிலும் சிறப்பானதாகும்
உடல் பருமன் நிறைந்த மக்களை மட்டுமே நீரிழி நோய் தாக்கும் : உடல் எடை மிகுதியாக இருந்தால் சர்க்கரை வருவதற்கான வாய்ப்புகள் மிக, மிக அதிகம் என்பது உண்மைதான். ஆனால், உடல் பருமனாக காட்சியளிக்க கூடிய ஒவ்வொரு நபருக்கும் இது கட்டாயம் வந்தே தீரும் என்று அர்த்தம் அல்ல. சில சமயம், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக உள்ளவர்களையும் கூட இது தாக்குகிறது.
சர்க்கரை நோயாளிகள் இனிப்பான எதையும் சாப்பிட கூடாது : இது முற்றிலும் உண்மை கிடையாது. ஏனென்றால், நம் உடலுக்கு ஆற்றலை வழங்கக் கூடியதாக சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் ஆகிய சத்துகள்தான் இருக்கின்றன. சர்க்கரை நோயுடன் உள்ள நோயாளிகள் அதிக இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே சமயம், சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உணவுகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு ரத்த சர்க்கரை எந்த அளவுக்கு உள்ளது என்பதை பொருத்து, எந்த அளவுக்கு இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து மருத்துவரை ஆலோசிக்கலாம்.
கண் பார்வை இழப்பு மற்றும் கால் இழப்பு ஏற்படும் : சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள அனைவருக்குமே கண் பார்வை இழப்பு ஏற்படும் மற்றும் கால் இழப்பு ஏற்படும் என்ற கருத்து உங்களை அச்சுறுத்தக்கூடிய தகவலாகும். நிச்சயமாக இது எல்லோரையும் பாதிக்க கூடியது அல்ல. உங்கள் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படாத அளவில் இருந்தால் மட்டுமே இது போன்ற பெரிய இழப்புகள் ஏற்பட சாத்தியம் உண்டு. புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை கைவிட்டு உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போன்றவை இந்த அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட உதவும்.
No comments:
Post a Comment