உடல் எடை கூடுவதற்கு அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலத்தில் உடல் எடை கூடுவது அனைவருடைய முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது. உடல் எடை கூடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாறிவரும் வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், சரியான உடற்பயிற்சி செய்யாமை போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கின்றன. இதை தவிர நமக்கு இருக்கும் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட உடல் எடை அதிகரிக்கலாம். இவ்வாறு உடல் எடை கூடிய பிறகு, அதனை குறைப்பதற்கு அனைவரும் என்னென்னவோ செய்து வருகின்றனர். ஆனால் அந்த பிரச்சனை அப்படியே தான் உள்ளது.
ஆனால் இவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கு மேலே கூறிய காரணங்கள் தவிர அதிகப்படியான மன அழுத்தமும் ஒரு காரணம் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிகப்படியான மன அழுத்தத்தினால் என்னென்ன வழிகளில் உடல் எடை கூடுகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.
அதிகமான பசி : மன அழுத்தத்தில் இருக்கும் போது இயற்கையாகவே தேவைக்கு அதிகமாக உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கிறது. ஜங்க் ஃபுட்ஸ் எனப்படும் உடலுக்கு கெடுதல் தரும் உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு வளர்ச்சிதை மாற்றத்தையும் குறைத்து உடல் எடை வேகமாக கூடுகிறது.
இன்சுலின் குறைபாடு : ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்களுக்குள் செலுத்துவது இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது இன்சுலின் செயல் திறன் பாதிக்கப்பட்டு இரத்தத்திற்கு சர்க்கரை கொண்டு செல்லப்படுவது வெகுவாக குறைகிறது. இதனால் செல்களில் உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வழி செய்கிறது.
உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தல் : பசியிலிருக்கும் போது வரைமுறையின்றி உணவு வகைகளை உட்கொள்வோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அவ்வாறு அதிகபடியான உணவுகளை உட்கொள்ளும்போது உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாக அதிகரிக்கிறது. இயற்கையாகவே தேவைக்கு அதிகமாக சர்க்கரை உடலில் சேரும்போது அது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் இதனால் உடல் உறுப்புகளும் பாதிக்கப்படலாம்.
தைராய்டு குறைபாடு: அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது தைராய்டு சுரப்பிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமான கோளாறு ஆகியவை ஏற்பட்டு உடல் எடை அதிகரிக்கிறது.
புரோஜெஸ்டிரோன் குறைபாடு : அதிகமான மன அழுத்தத்தில் இருக்கும் போது புரோஜெஸ்டிரோன் எனப்படும் செக்ஸ் ஹார்மோனின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் மற்றொரு ஹார்மோனின சுரப்பது அதிகமாகிறது. இயற்கையாகவே உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரக்கும் போது உடல் எடை கூடும். எனவே நீங்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு உட்படும்போது இவை நேரடியாக உடலில் ஹார்மோன் சமநிலையை பாதித்து உடல் எடை கூடுவதற்கு வழி வகை செய்கிறது.
No comments:
Post a Comment