குளிர்காலத்தில் நம் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். மிகவும் குறைந்த வெப்பநிலையில் நாம் நீண்ட நேரம் செயல்படும்போது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே பாதிக்கப்படுகிறது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பல நோய்களும் குளிர்காலத்தில் பலரை தாக்குகின்றன. அதனால் குளிர் காலத்தில் நம் உடலின் வெப்பநிலையை சரியாக வைத்துக் கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சில குறிப்பிட்ட உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அதே விதத்தில் குளிர் காலத்தில் நாம் உண்ணக்கூடாத சில உணவு வகைகளும் உள்ளன. இவற்றை தவிர்ப்பதன் மூலமே பல நோய் தாக்குதலில் இருந்து நம்மால் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அவ்வாறு எந்தெந்த உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று ஃபிஸ்கோ டயட் கிளினிக் நிறுவனர் விதி சாவ்லா சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.
காற்றடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்:
உங்களுக்கு குளிர்பானங்கள் மீது அலாதி பிரியம் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே சில்லென்று இருக்கும் இந்த குளிர் காலத்தில் நீங்கள் இந்த காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களை பருகும் போது அதில் உள்ள சர்க்கரை உடலின் இன்சுலினை மட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வேலையை செய்கிறது. மேலும் வெளிப்புற சூழ்நிலை ஏற்கனவே வெப்பநிலை குறைந்திருக்கும் போது, நம் உடலுக்கு வெப்பம் தேவைப்படும் நேரத்தில் குளிர்ந்த பானத்தை உட்கொள்ளும் போது உடலின் உட்புற வெப்பநிலையும் குறைகிறது. இவற்றிற்கு பதிலாக சூடான சூப் வகைகளை குடிக்கலாம்.
பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் :பாலில் இருந்து பெறப்படும் தயிர், மில்க் ஷேக் ஆகியவற்றை குளிர் காலங்களில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உடலில் அதிக சளியை உண்டாக்குவதோடு இருமல், ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஒருவேளை அவற்றை தவிர்க்க முடியவில்லை எனில் மதிய உணவிற்கு முன்னர் பால் பொருட்களை எடுத்துகொள்ளலாம். ஆனால் முடிந்தவரை பாலை மூலப் பொருளாக கொண்டு செய்யப்படும் பொருட்களை குளிர்காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும்.
வறுத்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் : குளிர் காலத்தில் சுடச்சுட பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெயில் பொரித்த உணவு பொருட்களை உண்பதற்கு இயற்கையாகவே ஆர்வம் உண்டாகும். ஆனால் முடிந்த அளவு இந்த உணவு பொருட்களை உண்பது தவிர்க்க வேண்டும். அதில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் செரிமான பிரச்சனைகளை உண்டாக்குவதோடு உடலின் சளி உற்பத்தியாவதை தூண்டுகிறது. குளிர்காலம் முடியும் வரை இந்த உணவுப் பொருட்களை உண்பதை தவிர்ப்பது நல்லது.
ஹிஸ்டமைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் : தக்காளி, காளான் போன்ற ஹிஸ்டமைன்கள் அதிகம் உள்ள பொருட்களை குளிர் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவையும் உடலில் சளி உற்பத்தியாவதை அதிகரிக்கும். இவற்றிற்கு பதிலாக பச்சை காய்கறிகளையும் கீரை வகைகளையும் உணவில் சேர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
No comments:
Post a Comment