குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பல்வேறு நோய்களின் தாக்குதல்களும் அதிகரித்துவிட்டன. அதில் ஒன்று தான் உயர் இரத்த அழுத்தம்/ஹைப்பர் டென்சன்.
எனவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க, உடலின் வெப்பநிலையை சீராக பராமரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் சில உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அந்த வகையில் சில உணவுகள் குளிர்காலத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்களைக் கொண்டிருப்பதோடு, இரத்த அழுத்தத்தைக் குறைத்து பராமரிக்கவும் உதவுகின்றன. இப்போது குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி காண்போம்.
வெந்தயம்
வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளது. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இரத்த அழுத்தத்தை நிலையாக பராமரிக்க உதவும். வெந்தய விதைகள் மற்றும் வெந்தய கீரைகளில் உப்பின் அளவு மிகவும் குறைவு. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் வெந்தய கீரைகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். இருப்பினும் தினமும் வெந்தயத்தை உபயோகிக்க வேண்டாம். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். வெந்தய கீரை கிடைக்காவிட்டால், வெந்தயத்தை பொடி செய்து சேமித்து, உணவில் சேர்த்து வரலாம்.
பச்சை இலைக் காய்கறிகள்
பொதுவாக பச்சை இலைக காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் வெளியேற்றப்படுபதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். எனவே குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க பசலைக் கீரை, முட்டைக்கோஸ், கேல், லெட்யூஸ் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இது தவிர இதில் உள்ள பி வைட்டமின்கள் நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. ஆய்வுகளின் படி, பீட்ரூட்டில் உள்ள அதிகப்படியான நைட்ரேட்டுகள், நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடைய வைத்து, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே உயர் இரத்த அழுத்த நோயாளிகள் குளிர்காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவது நல்லது.
பூண்டு
அன்றாட உணவில் சேர்த்து வரும் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மட்டுமின்றி, பராமரிக்கவும் உதவுகிறது. ஆகவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குளிர்காலத்தில் அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பது நல்லது. வேண்டுமானால், அதிகாலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீர் குடிக்கலாம். இருப்பினும் எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்கும் முன் உங்களை மருத்துவரிடம் கேட்ட பின்னரே முயற்சிக்க வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு
குளிர்காலத்தில் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தொற்றுக்களின் தாக்கத்தை தடுக்க சிட்ரஸ் பழமான ஆரஞ்சு பழங்கள் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இதில் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும் மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. எனவே குளிர்காலத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைத்தால், ஆரஞ்சு பழத்தை சாப்பிடுங்கள்.
முள்ளங்கி
முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் அதைக் குறைக்கவும் உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி, முள்ளங்கி இரத்தத்தை அமைதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், அவ்வப்போது முள்ளங்கியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment