இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளுக்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறோம். மண் பானை சமையல், வாழை இலை விருந்து, ஆர்கானிக் உணவு வகைகள், மர சீப்புகள், பனை ஓலைப் பாய் போன்றவற்றின் வரிசையில் செப்பு பாத்திரங்களும் இடம் பிடித்துள்ளது. ஆர்கானிக் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்கில் விதவிதமாகக் கிடைக்கும் செப்பு பாட்டில்களில் நீரை அருந்துவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செப்பு பாத்திரங்களில் நீரையோ அல்லது உணவையோ சாப்பிடுவதால் ஏற்படும் முழு நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் அசந்தேபோய் விடுவீர்கள். செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது மற்றும் உணவு அருந்துவது என்பது உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு, செரிமானமானத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.மேலும் புற்றுநோயின் ஆபத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்வை நமக்கு கொடுக்கிறது.செம்பு பாத்திரத்தால் ஏற்படும் நன்மைகளை இங்கே காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : கொரோனவால் இன்று உலகமே மாறியுள்ளது. ஒருவருக்கு கொரோனா ஏற்படாமல் இருக்க அவரிடம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். உங்கள் உடலில் தாமிர/செம்பு சத்து குறைவாக உள்ளதென்றால் உங்கள் இரத்த ஓட்டத்தில் வெள்ளை இரத்த அணுக்கள் குறையும் அபாயம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் உணவில் செப்பை நேரடியாகவோ அல்லது உட்செலுத்துதல் மூலமாகவோ எடுத்துக்கொண்டால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் மிக மிக குறைவு. அடிக்கடி காய்ச்சல் வரும் நபர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்களுக்கும் காப்பர்/ செப்பு சத்து பயனுள்ளதாக இருக்கும். செப்பு உணவு மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை தடுக்கிறது, பாக்டீரியாவை கொன்று நமக்கு நன்மைகளை அளிக்கிறது.
வலுவான எலும்புகள் : கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கி இருப்பது புதிய வாழ்க்கை முறையாக நமக்கு மாறியிருந்தாலும், இது நம் எலும்புகளுக்கு ஆரோக்கியமானதல்ல. நமது எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின் D போதுமான அளவு கிடைப்பதற்கு சூரிய ஒளி முக்கியமானது. செப்பு தாது ஒருவருக்கு குறைவாக இருந்தால் அவரின் எலும்பு பாதிப்படையக்கூடும். மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயை ஏற்படுத்தும்.
இதய ஆரோக்கியம் : இதயத்திற்கான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த செப்பு நமக்கு உதவுகிறது, இதனால் இதய சிக்கல்கள் ஏற்படுவது குறைகிறது. ஆயுர்வேதத்தின் படி, செம்பானது அமிலத்தன்மை, இதய எரிச்சல், இருமல், சளி போன்றவை குறைக்க பயனளிக்கிறது. குறைந்த அளவு தாமிரம்/செப்பு சத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை கொண்டுவரும்.
செப்பின் பிற நன்மைகள் : செப்புத் தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செப்பு பாத்திரம் அல்லது செப்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செப்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவில் செப்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.
செப்பு தாதுவானது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது. உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான செம்பு தாதுவிற்கான தடயங்கள் இல்லை என்றால், நீங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளால் அவதிப்படுவீர்கள்.செப்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு ஆகும். செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செப்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது.
செப்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செப்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும்.செப்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடித்தால் உடலிலுள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் சமப்படுத்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், உடலின் அமிலத்தன்மையையும் கட்டுப்படுத்தும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த நீர், உடலில் புதிய மற்றும்ஆரோக்கியமான அணுக்களை உருவாக்குவதற்கு துணைபுரிகிறது. இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவற்றை நீக்கிச் சருமத்தைப் பொலிவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
இ-கோலி (E.coli), சால்மோனெல்லா (Salmonella) போன்ற பொதுவான பாக்டீரியாக்களை செப்பு அழிக்கிறது. இப்போது நாம் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செப்பு பாத்திரங்கள்தான் சிறந்தவையாகும். பெண்கள் திருமணம் செய்துக்கொண்டு செல்லும் போது செப்பு பாத்திரங்களை சீராக கொடுக்கப்படும். புதுமணத்தம்பதிகள் செப்பு பாத்திரத்தை பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முறை கடைபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment