காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை எந்த வகையிலும் வீணடிக்காமல் முடிந்தவரை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்தவொரு சமையல் பொருளையும் வீணடிக்காத வகையில் தான் நம் முன்னோர்களின் சமையல் முறை இருந்தது. ஆனால், காலங்கள் மாற, மாற நமது சமையல் முறையும் வெகுவாக மாற்றம் அடைந்து விட்டது. உணவின் சுவைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு உணவுப் பொருள்களை வீணாக்காமல் பயன்படுத்தி கொள்ள காட்டுவதில்லை.
ஆனால், விலைவாசி முன்பு போல இல்லை. முன்பெல்லாம் 100 ரூபாய்க்கு 5 கிலோ பட்டானி கிடைத்தது. ஆனால், இப்போது ஒரு கிலோ பட்டானியின் விலையே 100 ரூபாயை தாண்டும். ஆக, நம் சமையல் அறைக்குள் உள்நுழையும் எந்தவொரு பொருளையும் நாம் வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நுனி முதல் அடி வரை பயன்பாடு : காய்கறிகளில் அனைத்துப் பகுதிகளையும் பயன்பத்திக் கொள்ளும் சாதூர்யத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேர்கள், தண்டுகள், கீரைகள், மலர்கள், மொட்டுகள் என அனைத்தையும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பாரம்பரியம் நம் உணவுக் கலாச்சாரத்தில் அடங்கியுள்ளது. அதேபோன்று ஊறுகாய் செய்வது, வத்தல் போடுவது, காய வைத்து பதப்படுத்துவது என பல்வேறு உத்திகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட வகையில், அனைத்து பாகங்களையும் உணவுப் பொருளாக மாற்றுவது அல்லது அதனை பதப்படுத்தி பிற்கால பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வது என இந்த இரண்டு உத்திகளை பயன்படுத்தினாலே நம் சமையல் அறைகள் கழிவு இல்லாத ஒன்றாக மாறும்.
கழிவுகளை தூக்கி எறிய வேண்டாம்: பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களில் நமக்கு தேவையான பகுதியை வெட்டி எடுத்துக் கொண்டு மற்றவற்றை தூக்கியெறியும் பழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதுபோல செய்யாமல் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு தண்டுக்கீரை வாங்கி கீரைகளை சமைக்கும் நாம், அந்தத் தண்டுகளை தூக்கியெறிய தேவையில்லை. அதை சிறு துண்டுகளாக வெட்டி சாம்பாரில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல, எலுமிச்சை சாதம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் தோல்களை பயன்படுத்தி ஊறுகாய் செய்யலாம். சரி பீட்ரூட் தோல், சௌ சௌ தோல் போன்ற எதற்குமே பயன்படுத்த முடியாத கழிவுகளை என்ன செய்வது? அவற்றை உரமாக மாற்றி நமது தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது பூந்தொட்டிகளுக்கு உரமிடலாம்.
வத்தல் முறை: வெண்டக்காய், சுண்டக்காய், மாங்காய் போன்ற காய்கறிகள் அதிகம் விளையும் காலங்களில், அதை மலிவான விலையில் வாங்கி வத்தல் போட்டு வைத்துக் கொள்வது மாபெரும் உத்தி ஆகும். பின்னாளில் இவை கிடைக்காத அல்லது விலை உயர்ந்த சமயங்களில் அவற்றை தண்ணீரில் ஊற வைத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூக்களை உண்ணும் பழக்கம் : பண்டைய காலங்களில் பூ உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. காலப்போக்கில் அது மாறிவிட்டது. சாதாரணமாக புளியம்பூ, வாழைப்பூ போன்றவற்றை பச்சையாகவோ, சமைத்தோடு சாப்பிடும் பழக்கம் இன்று மறைந்து வருகிறது. அவற்றிலும் கூட ஊட்டச்சத்துகள் நிறைய இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வேப்பம்பூவை சூப் செய்து அருந்துவார்களாம்.
இதையும் முயற்சி செய்யலாம்: வெங்காயம் விலை ஏறி விட்டதாக கண்ணீர் சிந்த வேண்டாம். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றைக் கூட நறுக்கி காய வைத்து, பிறகு தேவைப்படும் காலங்களில் பயன்படுத்தும் உத்தி சில குடும்பங்களில் உள்ளது. ஆக, மொத்தம் காய்கறிகளை மதிப்பு கூட்டுப் பொருட்களாக மாற்றி விட்டால் மழைக்காலம் அல்லது விலை உயர்ந்த காலங்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Click here to join whatsapp group for daily health tip
No comments:
Post a Comment