உடற்பயிற்சியை தடையில்லாமல் பின் தொடர்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
எளிமையாக தொடங்குங்கள்:
ஒரே நாளில் உடற்பயிற்சியில் சிறந்த நிலையை எட்ட முடியாது. ஆரம்பத்திலேயே கடினமான உடற்பயிற்சியை தேர்ந் தெடுத்தால் சோர்வடைந்துவிடுவீர்கள். உடலில் நீரிழப்பும் ஏற்படும். எனவே ஆரம்பத்தில் எளிமையான பயிற்சியை தொடருங்கள். அரை மணி நேரம் விறுவிறுப்பாக நடப்பது, 15 நிமிடம் நடனம் ஆடுவது அல்லது யோகா மேற்கொள்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் பிறகு உடற்பயிற்சியை தொடங்கலாம். நீண்ட நாட்கள் உடற்பயிற்சி செய்து வருபவர்களும் இடையில் நிறுத்தியவர்களும் கூட இந்த முயற்சியை பின் தொடரலாம். எளிமையாக தொடங்கும்போது, அன்றாட வழக்கத்துடன் தொடர்ந்து பின்பற்றுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தை உறுதி செய்ய வித்திடும். எடை இழப்பு இலக்கை அடைவதற்கான ஒரு கருவியாக உடற்பயிற்சியை கருதாமல் வாழ்க்கை முறை தேர்வாக ஏற்று தினமும் கடைப் பிடிக்க வேண்டும்.
சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுங்கள்:
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் ஒருவித சலிப்பு காரணமாக சிலர் பாதியிலேயே நிறுத்திவிடுவார்கள். சரியான உடற் பயிற்சியை தேர்ந்தெடுக்காததுதான் அதற்கு காரணம். நிறைய பேர் தங்கள் நண்பர் ஜிம்முக்கு செல்கிறார் என்பதற்காக தானும் சேர்ந்துவிடுவார்கள். நண்பர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளை பார்த்து தானும் மேற்கொள்வதற்கு விரும்புவார்கள். அதுபோன்ற முயற்சியில் ஈடுபடாமல் தங்கள் உடல் வாகுக்கு பொருத்தமான 'வொர்க் அவுட்'டை கண்டறிந்து செயல்பட வேண்டும்.
ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்:
ஒரே விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை சலிப்பை ஏற்படுத்திவிடும். ஏரோபிக்ஸ் பயிற்சிகள், உடல் வலிமையை அதிகரிக்கச் செய்யும் பயிற்சிகள் என வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
நேரம் ஒதுக்குங்கள்:
உடற்பயிற்சியை தவிர்ப்பதற்கு நேரமின்மையை பலர் காரணமாக முன்வைக்கிறார்கள். அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு நேரம் ஒதுக்குவதுபோல உடற்பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சிக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கினால், மற்ற விஷயங்களுக்கு தானாகவே நேரம் கிடைத்துவிடும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதால் மந்த உணர்வு நீங்கும். எந்த வேலையையும் சுறுசுறுப்பாக செய்து விட முடியும்.
நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:
தனிமையில் உடற்பயிற்சி செய்வது சில காலத்திற்கு பிறகு சலிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக உடற்பயிற்சி செய்வது கூடுதல் நன்மைகளை தரும். உடற்பயிற்சி செய்வதை குறிக்கோளாக கடைப்பிடிக்க தொடங்கிவிடுவீர்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய உடற் பயிற்சிகளையும் முயற்சிக்க பழகிவிடுவீர்கள்.
சத்தான உணவை உண்ணுங்கள்:
உடல் நலத்துக்கு உடற்பயிற்சி முக்கியமானது, அதுபோல் உணவும் அவசியமானது. எனவே, உடற்பயிற்சி செய்யதொடங்கும்போது, உணவிலும் கவனம் செலுத்துங்கள். பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சமச்சீரான உணவை உண்ணுங்கள். போதுமான தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு 'வார்ம் அப்' பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுங்கள். உடற் பயிற்சி செய்து முடித்த பிறகு போதிய ஓய்வு எடுக்கவும் மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment