பணம் சேமிப்பது சம்பாதிப்பதற்கு சமம்…எப்படி? - Agri Info

Adding Green to your Life

November 22, 2022

பணம் சேமிப்பது சம்பாதிப்பதற்கு சமம்…எப்படி?

 பணம் சம்பாதிப்பதைவிட, அதை புத்திசாலித்தனமாக செலவழிப்பதிலும், சேமிப்பதிலுமே இருக்கிறது லைஃப் ஸ்டைலின் வெற்றி. கிரெடிட் கார்டு தொடங்கி, ஹோம்லோன் வரை ஒவ்வொரு விஷயத்திலும் தேர்ந்தெடுப்பது முதல் பயன்படுத்துவது வரை தேவை... அதீத கவனம். எப்படி என்று பார்க்கலாமா?



ஆயுள் காப்பீடுகளில், டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகமுக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. வருமானம் ஈட்டுபவர்களுக்கு மட்டும்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானத்தைப்போல 10 மடங்கு தொகைக்கு கவரேஜ் எடுக்கலாம். இளம்வயதிலே இந்தப் பாலிசியை எடுக்கும்போது, பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். அதாவது 30 வயதுடைய நபர், 30 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு இன்ஷூரன்ஸ் செய்ய நினைத்தால், ஆண்டு பிரிமியம் 9 ஆயிரம் ரூபாய்தான். இது மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் போல ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு, சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா... தேதி உறுதியாகத் தெரிந்தால், தேவைப்படும் தொகைக்கு ஆர்.டி அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இன்றே முதலீட்டை ஆரம்பியுங்கள். தேதி உறுதியாகவில்லை எனில், வங்கிக் கணக்கு அல்லது குறுகியகால டெபாசிட், ஃப்ளக்ஸி டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

தங்கத்தில் முதலீடு எனும்போது, தங்க நகைச் சீட்டுத் திட்டங்கள், தங்கக் காசுகள் என்று சிந்திப்பதைத் தவிர்க்கலாம். நகைச் சீட்டு என்பது சரிவர நெறிப்படுத்தப்படவில்லை என்பதால், ரிஸ்க் உங்களைச் சேர்ந்ததே! தங்கக் காசுகளை விற்கும்போது 23% கழிவு இருக்கும் என்பதால் இதுவும் நமக்கு நஷ்டமே. கோல்டு இ.டி.எஃப் அல்லது கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதில் தங்கம் உலோகமாக இல்லாமல் யூனிட்களாக சேமிக்கப்படுவதால், கழிவின்றி அன்றைய விலைக்கு யூனிட்களை விற்று, தங்கம் வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்காவது மருத்துவ காப்பீடு எடுப்பதுதான் இக்காலத்துக்கு நல்லது. மேலும் அடிக்கடி வரும் சின்னச் சின்ன மருத்துவச் செலவுகளுக்காக ஒரு தொகையை, வங்கிக் கணக்கு அல்லது ஃபிக்ஸ்ட் டெபாசிட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வைத்து, எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய நிலையில் இருவர் உள்ள குடும்பத்துக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் தேவை. இதுவே சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு பணவீக்கம் 7 சதவிகிதம் என்றிருந்தாலே சுமார் 58 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். எனவே, ஓய்வு காலத்துக்குத் திட்டமிட்டுக் கொள்வது அவசியம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் தொகையுடன் கூடுதல் தொகையையும் முதலீடு செய்யலாம்.

நீண்டகால தேவைகளுக்கும், 500 ரூபாய் முதல் 1,50,000 வரை பி.பி.எஃப்  திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதை 15 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது. மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் சுமார் 3.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.  வி.பி.எஃப், பி.பி.எஃப் திட்டங்களுக்கு கூட்டுவட்டி விகிதம் கணக்கிடப்படும். வருமான வரிச்சலுகையும் உண்டு.

குழந்தைகளின் உயர் கல்விக்கு, கிட்டத்தட்ட 13 - 15 வருடங்களுக்கு முன்பிருந்தே சேமித்து வரலாம். அதாவது ஆண்டுக்கு 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் 2 ஆயிரம் ரூபாயை அடுத்த 15 வருடத்துக்கு முதலீடு செய்தால், 13,37,014 ரூபாய் கிடைக்கும். இதில் உங்களின் முதலீடு என்பது 3,60,000 ரூபாய்தான். கல்லூரியில் சேரும் காலத்துக்கு முன்பே நாம் டார்கெட் செய்த தொகை வந்துவிட்டால், அப்போதே பணத்தை எடுத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துவிட வேண்டும் அப்போதுதான் சந்தையின் ஏற்ற இறக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

பிள்ளைகளின் திருமணத்தை நடத்த இன்றைக்கு 10 லட்ச ரூபாய் தேவை எனில், இன்னும் 20 வருடங்கள் கழித்து 70 லட்சம் ரூபாய் தேவைப்படலாம். இதுபோன்ற நீண்டகால தேவைகளுக்கு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நல்ல வருமானம் தரும். அதாவது எஸ்.ஐ.பி முறையில் மாதம் 4,675 ரூபாய் என, 15 சதவிகிதம் வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில், 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வில் உங்களுக்கு 70 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் நீங்கள் மொத்தமாக 11.22 லட்சம் ரூபாய்தான் முதலீடு செய்திருப்பீர்கள்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், கடன் தொகையைச் சரியான நேரத்தில் செலுத்திப் பராமரித்தால் மட்டுமே பலன். இல்லையென்றால், வட்டிக்கு வட்டி என்று ஓய்ந்துவிட வேண்டியதுதான். வட்டி விகிதம் குறைந்தபட்சம் 24 - 36% என்பதால், இ.எம்.ஐ. முறையில் பொருட்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட தேதியில் செலுத்தவில்லை எனில் அபராதம் இருக்கும். ஒழுங்காகச் செலுத்தவில்லையெனில், உங்களின் பெயர் சிபில் ரிப்போர்ட்டில் சேர்ந்துவிடும். பிறகு, உங்களால் வேறு எந்த வங்கியிலுமே கடன்கள் எதையும் வாங்க முடியாத நிலை ஏற்படும்!



பொதுத்துறை வங்கிகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்குவதில்லை. தனியார் நிதி நிறுவனங்கள் 16 - 18% வரையிலான வட்டியில் கடன் தருகின்றன. எனவே, சேமிப்புப் பணத்தில் வாகனம் வாங்குவதே சிறந்தது. அடுத்த வருடம் பைக் வாங்க வேண்டும் எனில், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்.டி) முறையில் வங்கிகளில் முதலீடு செய்யலாம். இதில் 7.5 - 9% வரை வட்டி கிடைக்கும். அதாவது, மாதம் 3 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தினால், ஓராண்டு முடிவில் சுமார் 38 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் வாங்கவிருக்கும் பைக்கின் விலையைப் பொறுத்து, மாதாந்திர தொகையை அதிகரிக்கலாம். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட சரியான திட்டமிடல் இருந்தால் நாம் சம்பாதிப்பது குறைவாக இருந்தாலும் வாழ்க்கை நிறைவாக இருங்கள். எதையும் பிளான் பன்னாம பன்னக் கூடாது…ஓகே? 

Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment