இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படும் நோய்களில் முதலிடத்தில் நீரிழிவு நோய்தான் உள்ளது! முறையற்ற உணவுப் பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை என்று நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. நீரிழிவு நோய் ஏற்பட்டால் உடல் சரியான அளவு ஊட்டச்சத்துக்களை கிரகித்துக்கொள்ள முடியாது என்பதால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிக மிக முக்கியம்.
அதில், அதிக நார்ச்சத்து, சிம்பிள் கார்போஹைட்ரேட் மற்றும் லோ-கிளைகெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் மாவு சத்து நிறைந்த அரிசி கோதுமை ஆகியவற்றை சாப்பிட்டு தான் அதிகமாக பழக்கம் உள்ளது. எனவே அரிசியை குறைத்து அல்லது தவிர்த்து அதற்கு மாறாக வேறு எந்த சத்து நிறைந்த மாவு வகைகளைப் பயன்படுத்தலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பல தானியங்களின் கலவை (மல்டிகிரைன் மாவு) : பொதுவாகவே, ஏதேனும் ஒரு தானியத்தை சாப்பிடுவதைவிட பல விதமான தானியங்களை சேர்த்து சாப்பிடுவது என்பது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். தற்போது மல்டிகிரைன் ஃப்ளோர் என்பது ரெடிமேடாகவே கடைகளில் கிடைக்கிறது அல்லது நீங்களாகவே முழு தானியங்களை வாங்கி மாவாக அரைத்துக் கொள்ளலாம். மல்டி க்ரைன் மாவில் உடலுக்கு தேவையான நார்சத்து, வைட்டமின் மற்றும் லோ கிளைகெமிக் கார்போஹைட்ரேட்டுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் எடை குறைப்பதிலும் உதவும்.
கேழ்வரகு / ராகி மாவு : சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது கேழ்வரகு என்று கூறப்படும் ராகி மாவு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு மிகச் சிறந்த உணவாக கேழ்வரகில் செய்த நீங்கள் தினமும் கூட சாப்பிடலாம். கேழ்வரகில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது நேரடியாக நீரிழிவு நோயை எதிர்த்து போராடும். அதுமட்டுமல்லாமல் கேழ்வரகில் மற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு இரண்டையும் குறைக்கும். அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான எடை குறைப்பிற்கும் உதவும். கஞ்சி, கூழ் மட்டுமில்லாமல் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை சமைக்க முடியும். தற்பொழுது குக்கிஸ், கேக் உள்ளிட்ட பேக்கரி ஐட்டங்கள் கூட கேழ்வரகு மாவை பயன்படுத்தி செய்யலாம்.
கொண்டை கடலை மாவு : கொண்டைக் கடலை புரத சத்து நிறைந்த மிக மிக ஆரோக்கியமான உணவாகும். பலவீனமாக, நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு கொண்டைக்கடலை கொடுப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதேபோல நீரிழிவு நோயாளிகள் கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் குளுக்கோஸ் மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஓட்ஸ் மாவு : ஓட்ஸ் சாப்பிட்டால் எடை குறையும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஓட்ஸில் நார்சத்து நிறைந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் மிக மிக குறைவான கலோரி கொண்ட உணவுகளில் ஓட்சுக்கு தனி இடம் இருக்கிறது. ஓட்ஸ் சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். இவை அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றவை. மேலும், ஓட்சில் இருக்கும் பீட்டா-குளுகான் என்ற ஒரு காம்பவுண்ட் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். ஓட்ஸ் கஞ்சிக்கு மாறாக, ஓட்ஸ் மாவைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் உணவை சமைக்கலாம்.
No comments:
Post a Comment