பனிக்கால நோய்களில் இருந்து உடலை காக்க சித்த மருத்துவ முறைகள் குறித்து இம்ப்காப்ஸ் இயக்குனரும், வேலூரை சேர்ந்த சித்த மருத்துவருமான டி.பாஸ்கரன் கூறியதாவது:-
பொதுவாக பனிக்காலம் என்பது (முன்பனி, பின்பனி) மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரக்கூடியது. இந்த பனிக்காலத்தில் மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு போன்ற பண்டங்களை உட்கொள்ள வேண்டும்.
நீரை கொதிக்க வைக்கும்போது ஒரு டீஸ்பூன் மிளகு அல்லது லவங்கம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். காலையில் எழுந்து மூச்சுப்பயிற்சி செய்து துளசி, மிளகு, வெற்றிலை மற்றும் தேன் சேர்த்த பானத்தை அருந்தினால் மூச்சுப்பாதை சீராகி கோழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் தடுக்கப்படும். அத்துடன் உடலுக்கு குளிரைத் தாங்கும் சக்தி ஏற்படும்.
மேலும் பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய சுரம் (காய்ச்சல்), சளித் தொல்லையைப் போக்க திரிகடுகு சூரணத்தை தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சில் சளி கட்டுதல், தொண்டையில் டான்சில் வீக்கம், ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வருவது நல்லது.
பனிக்காலத்தில் காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் சுவாசிப்பதில் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதற்கு கல்யாண முருங்கை இலையை வடை அல்லது அடை செய்து சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத் தரும். சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் முற்றிய முருங்கை விதையைச் சாப்பிட்டு அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சளி, இருமல் மட்டுமின்றி மலக்கட்டினையும் தடுக்கலாம். மேலும் இந்த காலக்கட்டத்தில் எப்போதும் குளிர்ந்த சூழல் நிலவுவதால் அந்த குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷத்துடன் தும்மல், மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்தச் சூழலில் வாய் வழியாக சுவாசிக்க நேர்வதால் மூச்சுக்குழாய்க்குள் கிருமிகள் எளிதாக நுழைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
நொச்சி, வேப்பிலை, நுணா போன்றவற்றை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது மூக்கடைப்பிலிருந்து விடுபட உதவும்.
மிளகை தீயில் எரித்து அதன் புகையை சுவாசித்தால் மூக்கடைப்பு விலகும்.
கற்பூரவல்லி, தூதுவளை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லையை மட்டுமல்ல மூட்டு வலியையும் தவிர்க்கலாம்.
மூட்டு வலி உள்ளவர்கள் அவ்வப்போது முடக்கத்தான் கீரையை தோசை செய்து சாப்பிடுவது, ரசம் வைத்து சாப்பிட்டு வருவது நல்லது. பனிக்காலத்தின்போது வாரத்தில் இரண்டு நாட்கள் சுக்கு மற்றும் நொச்சித் தைலத்தை உடல் முழுவதும் தடவ வேண்டும்.
முக்கியமாக எல்லா மூட்டுகளிலும் இந்த தைலங்களைத் தடவி குளித்தால் மூட்டுவலி நன்றாகக் குறையும். அத்துடன் உடல் வறட்சியும் குறையும். உடல் வறட்சி அதிகம் உள்ளவர்கள் குளிப்பதற்கு 10 நிமிடத்துக்கு முன் உடலில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
பனிக்காலத்தில் காலை எழுந்ததும் வரும் அடுக்குத் தும்மல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு டம்ளர் பாலில் 10 பூண்டுப்பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேகவைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment