ஊட்டச்சத்து தனிமனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. அது சமூகம் சார்ந்தது, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடியது. ஏனென்றால், வலுவான மனிதனால்தான் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து வீட்டுப் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்.
இந்தியாவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமை மட்டுமே காரணமல்ல. எது சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது குறித்த அறியாமையும் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்கு ஆற்றல் தருபவை. நம் அன்றாட உடலியக்கச் செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை இவை தருகின்றன.
தானியங்கள், கிழங்குகள், தண்டுகள், காய்கறிகள், உலர் பழங்கள், எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை ஆற்றல் தரும் உணவுகளில் சில. புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் உடலின் கட்டமைப்பை உருவாக்க உதவுகின்றன. பால், இறைச்சி, முட்டை, மீன், பருப்பு வகைகள், கொட்டைகள் ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்திருக்கிறது. இவை உடலைக் கட்டமைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் ஆற்றலும் தருகின்றன.
புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை நம் உடலை பாதுகாத்து, உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கின்றன. உடல் வெப்பநிலையை சீராகப் பராமரித்தல், தசை சுருக்கம், உடலின் நீர் சமநிலையை கட்டுப்படுத்துதல், ரத்தம் உறைதல், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல், இதயத் துடிப்பைப் பராமரித்தல் போன்ற வேலைகள் இதில் அடங்கும்.
நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாது உப்புகளும் கிடைத்தால்தான், இந்த செயல்கள் தொய்வின்றி நடக்கும். காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, ஈரல், பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்திருக்கின்றன. எனவே, அவற்றைப் போதுமான அளவு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment