மனித உடலில் இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றன சிறுநீரகங்கள். உடலில் ஒட்டுமொத்த திரவ சமநிலைக்கு சிறுநீரகங்கள் பொறுப்பாக உள்ளன. அவை உடலில் உள்ள கழிவுப்பொருட்கள் மற்றும் நச்சுகளை வடிகட்டி சிறுநீராக வெளியேற்ற உதவுகின்றன. ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியம் என்பது நம் நல்வாழ்வை உறுதி செய்ய கூடிய ஒன்று. தொடர்ந்து செய்யப்படும் சில சிறிய விஷயங்கள் கூட சிறுநீரகங்களை பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம், சில தினசரி பழக்கவழக்கங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் ரத்தத்தை வடிகட்டும் மற்றும் உடலில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் திறனில் பாதிப்புகள் ஏற்படும். நம் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பொதுவான சில பழக்கங்கள் இங்கே...
உப்பு அதிகமாக சேர்த்து கொள்வது: உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வது நம் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், இது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இப்பழக்கம் உடலில் அதிகப்படியான சோடியத்திற்கு வழிவகுக்கும். உடலில் குவியும் அதிக சோடியத்தை அகற்ற முடியாமல் சிறுநீரகங்கள் சிரமப்படும். இது சிறுநீரக ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். எனவே சோடியம் நிறைந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
அதிக சர்க்கரை : உப்பை போலவே உணவில் அதிக சர்க்கரை சேர்த்து கொள்வதும் சிறுநீரகங்களுக்கு தீமை விளைவிக்கும். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இதன் விளைவாக சிறுநீரக கோளாறுக்கான ஆபத்து விரைவாக அதிகரிக்கிறது.
உடலில் போதுமான நீர்சத்து இல்லாமல் வைத்திருப்பது : தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கம் வளர்சிதை மாற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
உடற்பயிற்சி செய்யாமலிருப்பது : நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
புகைபழக்கம்: புகைபழக்கம் சிறுநீரகங்களில் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் சிறுநீரக ரத்த நாளங்களை சுருக்குகிறது. புகைபிடித்தல் சிறுநீரகத் தமனிகளின் தடித்தல் மற்றும் கடினப்படுத்துதலுக்கும் காரணமாகிறது. ஆரோக்கியமான சிறுநீரகங்களை பெற விரும்பினால் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
அதிக மது நுகர்வு: ஆல்கஹால் சிறுநீரக செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது மற்றும் ரத்தத்தை வடிகட்டும் திறனை குறைக்கிறது. அதிக ஆல்கஹால் நுகர்வு யூரிக் அமிலத்தின் உருவாக்கத்தை அதிகரித்து சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.
பெயின் கில்லர்ஸ் & பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ்:
நம்மில் பலர் உடல்வலி அல்லது தலைவலி என்றாலே உடனே வலி நிவாரணிகளை எடுத்து கொள்கிறோம். மருத்துவர்களின் பரிந்துரை இன்றி அடிக்கடி எடுத்து கொள்ளும் பெயின் கில்லர் மாத்திரைகள் நம்முடைய சிறுநீரகங்களை வெகுவாக பாதிக்கும் மேலும் நீண்டகால சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும். மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் ஊட்டச்சத்து அல்லது பாடி-பில்டிங் ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment