ஒவ்வொரு புத்தாண்டிலும் வெவ்வேறு உறுதிமொழிகளை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்றாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை நாம் கடைப்பிடிப்பதில்லை. இதனால் பெரும்பாலான நபர்கள் இப்போதெல்லாம் உறுதிமொழி எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால், நம் வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய வேண்டும் என்றால் தனி சுகாதார நடவடிக்கைகளை நாம் எந்தவிதத்திலும் கை விட்டுவிடக் கூடாது. கடந்த கால அனுபவங்கள் இந்தப் பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளன. ஆக, இந்த ஆண்டில் தனி சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் வகையில் நீங்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழி என்ன, ஏன் அது அவசியம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
தினசரி உடற்பயிற்சி :
தினசரி உணவு சாப்பிடுவது, தூங்குவதை போலவே மிகவும் அத்தியாவசியமான பழக்கம் உடற்பயிற்சி ஆகும். உடற்பயிற்சி செய்யாமல் உடல் இயக்கமின்றி வாழ்க்கையை வாழுபவர்களுக்கு பலவிதமான நோய்கள் ஆட்கொள்கின்றன என்பதை மறக்க வேண்டாம். கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடைபயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சிகள் போதுமானது.
கை சுகாதாரம் :
கொரோனா பெருந்தொற்று காலம் வந்ததில் இருந்தே கைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்து நாம் எல்லோரும் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால், வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தில் அதை அவ்வப்போது மறந்து விடுகிறோம். கைகளை அவ்வப்போது கழுவும் பழக்கம் நம் குணாதிசயங்களில் ஒன்றாக மாற வேண்டும். இதைச் செய்ய தவறும் பட்சத்தில் ஏராளமான நுண்ணுயிர்கள் வயிற்றினுள் செல்லும் என்பதை மறக்க வேண்டாம்.
வாய் சுகாதாரம் முக்கியம் :
காலை எழுந்தவுடன் யாரும் பல் துலக்குவதற்கு மறப்பதில்லை. ஆனால், அதற்குப் பிறகு வாய் சுகாதாரம் குறித்து மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் பாக்டீரியா மற்றும் கிருமிகள் நம் பற்களை தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு. குறிப்பாக, வாயில் உணவுப் பொருள் தங்குவதே கிருமிகளுக்கான அச்சாரம் ஆகும். ஆகவே சாப்பிட்டவுடன் வாய் கொப்பளிக்கவும். காலை பல் துலக்கிய பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்ல தீர்வை தரும்.
இரவில் நல்ல தூக்கம் அவசியம் :
இரவில் தூங்க வேண்டிய நேரத்தில் ஆன்லைனில் மூழ்கியிருக்கும் பழக்கம் இன்று பரவலாக இருக்கிறது. ஆனால், சரியான நேரத்திற்கு தூங்கச் சென்றால் மட்டுமே ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கம் தான் நம் உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். நாம் தூங்கும்போது நம் செல்கள், திசுக்கள் ஆகியவை மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன. அதிலும் இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை பலரையும் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில், சரியான நேரத்திற்கு ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் பழக்கத்தை நம்மில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment