சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும். அவை: பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (கீழ் நோக்கு காற்று), வியானன் (பரவு காற்று), உதானன் (மேல் நோக்கு காற்று), சமானன் (நடுக்காற்று), நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும். இவை நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார்.
வாயுப் பிரச்சினை என்றால் என்ன, வாயு எவ்வாறு? எப்படி? வயிற்றில் உருவாகிறது என்று பார்ப்போம்.
உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும் போது, நம்மை அறியாமலே காற்றையும் விழுங்கி விடுகிறோம். குடலில் உணவு செரிக்கும்போது, அங்கு இயல்பாகவே இருக்கும் லேக்டோ பேசில்லை போன்ற நன்மை தரும் பாக்டீரியாக்கள் நொதித்தல் செயல் மூலம் வேதி மாற்றங்கள் நிகழும் போது ஹைட்ரஜன், நைட்ரஜன், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் போன்ற பல வாயுக்கள் தினமும் சுமார் 2 லிட்டர் வரை உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் ரத்தத்தால் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப்பாதை வழியே வெளியேறுகிறது.
சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. அளவு வாயு தான் இருக்கும். குடலில் உள்ள வாயுக்கள் ஏப்பம் மூலம் வாய் வழியாக அல்லது ஆசன வாய் வழியாக வெளியேறும்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. வாயு மேல் நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப்பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப்பக்கத்தில் வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்குகிறது. மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் இவைகளை வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.
வாயுப் பிரச்சினை தீர உதவும் உணவுப் பழக்கம்:
1) தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உணவை காலந் தவறாமல் எடுக்க வேண்டும்.
2) உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தும் சீரகத்தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வாயுப்பிரச்சினை குறையும்.
3) சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் இவைகளை வறுத்து பொடித்து வைத்து, சோற்றில், உப்பு, நெய் சேர்த்து சாப்பிட வாயுப்பிரச்சினை நீங்கும்.
4) மோரில், வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து குடிக்கலாம்.
5) ஓமத்தீநீர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில்:
1) ஏலாதி சூரணம் 1 டீஸ்பூன் அல்லது இரண்டு மாத்திரை வெந்நீரில் எடுக்க வேண்டும்.
2) சீரக வில்வாதி லேகியம் அல்லது வில்வாதி லேகியம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
3) குன்ம குடோரி மெழுகு 250-500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா) மின்னஞ்சல்: doctor@dt.co.in,
0 Comments:
Post a Comment