குளிர்காலத்தில் பொதுவாகவே ஒரு சில உடல் நல பாதிப்புகள் ஏற்படும். சாதாரணமாக மற்ற காலத்தை விட, குறைவான வெப்ப நிலையால் வலி, செரிமானக் கோளாறு, உடல் இயக்கத்தில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, உள்ளிட்ட பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். குளிரால் ரத்த ஓட்டத்தின் வேகம் கொஞ்சம் குறையும். மேலும், ஹைப்போதெர்மியா என்ற உடல் வெப்பம் வேகமாக குறையும் குறைபாடு, உயிருக்கே ஆபத்தாக முடியும். மேலும், குளிர்காலத்தில் திசுக்கள் விரிவாக்கம் அடையும், இதனால் அழற்சி மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும். எனவே, உங்கள் வீட்டில் முதியவர்கள் இருந்தால் அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
முதியவர்களின் உடல் வெப்பமாக இருக்க வேண்டும் : குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை அதிகரிக்க அல்லது தக்கவைக்க, கம்பளி ஆடைகள், கையுறைகள், காலுறைகள், தொப்பி, ஆகியவற்றை முதியவர்கள் அணிய வேண்டும். குளிரில் உடல் நடுங்காமல், வெப்பமாக இருந்தால், நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க முடியும்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் : குளிர்காலத்தில் ஜில்லென்று இருக்கிறது, நாள் முழுவதும் படுக்கையிலேயே இழுத்து போர்த்தி கொண்டு தூங்கலாம் என்று தான் நினைப்போம். முதியவர்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ஆனால் இளமையாக இருப்பவர்கள் போலவே முதியவர்களும் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும். நாள் முழுவதும் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் இருப்பது மூட்டுக்களை இறுக்கமாக்கி வலி மற்றும் அழற்சியை ஏற்படுத்தும்.
எனவே அவர்கள் உடல் ரீதியாக ஏதாவது ஒரு வேலையை செய்து கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டுக்குள்ளேயே நடக்கலாம், அல்லது சின்ன சின்ன ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யலாம். எளிமையான வீட்டு வேலைகளை செய்யலாம். இவ்வாறு செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராகி, உடல் குளிர்ச்சியடைவதிலிருந்து பாதுகாக்கும். இது அவர்களுக்கு ஆற்றலையும் கொடுக்கும்.
வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும் : குளிர்காலத்தில் நல்ல சூடான நீரில் குளிப்பது இதமானதாக இருக்கும். இருப்பினும் எவ்வளவு சூடாக குளிக்கிறோமோ, அந்த அளவுக்கு சரும பாதிப்பும் ஏற்படும். சருமம் வறட்சியாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் சூடான நீரில் குளித்த பின்பு, சிறிது நேரத்திலேயே உடல் சில்லென்று மாறி நடுங்க ஆரம்பிக்கும். எனவே வயதானவர்கள் சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் அவர்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும். மூட்டுகளில் வலி மற்றும் அழற்சி இருந்தால் அவர்கள் தங்கக்கூடிய அளவுக்கு சூடான நீரால் ஒத்தடம் கொடுக்கலாம்.
தண்ணீர் குடிக்க வேண்டும் : பொதுவாகவே குளிர்காலத்தில் அதிக அளவுக்கு தாகம் எடுக்காது என்பதால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்துவிடும். ஆனால் தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தாகம் எடுக்காமலேயே உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே சருமத்துக்கு மட்டும் அல்லாமல் உடலுறுப்புகள் இயல்பாக இயங்குவதற்கு தேவையான அளவுக்கு தண்ணீரை குடிக்க வேண்டும். சூடாக அல்லது சாதாரண டெம்பரேச்சரில் இருக்கும் தண்ணீரை குடிப்பதை விட, வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது. தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை என்றால் கிரீன் டீ, லெமன் டீ, பிளாக் டீ, சுக்கு காப்பி போன்ற பானங்களையும் குடிக்கலாம்.
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மிகவும் முக்கியம். அதே போல, வைட்டமின் சி நிறைந்த உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம்.
No comments:
Post a Comment