கலைப்பொருட்களுக்கு என்று பெரிய சந்தை உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளும் கைவினைப்பொருட்களுக்கு என்று பெரிய அளவிலான சந்தைகள் உண்டு. தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பாரம்பரிய மற்றும் பெருமைக்குரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு எனப்படும் அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. அதில் கைவினைப்பொருட்களும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தது கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்வது 2வது பெரிய வேலைவாய்ப்பு பிரிவாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் கைவினைப்பொருட்கள் உற்பத்தி கிராமங்களிலிருந்து சிறிய அளவிலான நகரங்களில் இருந்து நடைபெற்று உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் ஓவியங்கள், குடைவரை சிற்பங்கள், மரக்கடை சிற்பங்கள், நகை வேலைப்பாடுகள், உலோக சிற்பங்கள், ஜவுளி, பாய் முடைதல், மட்பாண்டம் மற்றும் மண் சிற்பங்கள் மற்றும் கார்பெட் செய்தல் போன்ற கலைத்திறன்கள் மூலம் தமிழ்நாட்டில் இருந்து பல விதமான கைவினைப்பொருட்கள் விற்பனைக்குச் செல்கிறது.
கைவினைப்பொருட்கள் செய்வதைக் கற்றுக்கொள்ளப் பெரிய அளவிலான படிப்பு அவசியமில்லை. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட அரசின் கைவினைப்பொருட்களுக்கான பயிற்சியை உதவித்தொகையுடன் பெற்று சுயமாக நிதி உதவியுடன் தொழில் தொடங்கலாம். மேலும் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் கலை மற்றும் பண்பாட்டுத் துறை கீழ் அரசால் நடத்தப்படும் கல்லூரிகளில் சேர்ந்து கலையைக் கற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கலாம் அல்லது நிறுவனங்களில் பணி செய்யலாம்.
கைவினைப்பொருட்கள் தயார் செய்யப் பயிற்சி பெறுவது எப்படி :
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தில் (பூம்புகார்) கைவினைக்கலைஞர்களுக்கு 5 மாத IDTDP(Integrated Development and Promotiion of Handicrafts) பயிற்சி மற்றும் 2 மாத DRDC(Design Research and Development Centre) பயிற்சி அளிக்கின்றனர். IDTDP மூலம் கலைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு மற்றும் புதிய வகையை டிசைன்களை அறிமுகப்படுத்தப்படும். DRDC பயிற்சி மூலம் 3டி தொழில்நுட்ப மூலம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ஓவியங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
IDTDP திட்டத்தின் மூலம் பயிற்சி பெரும் கலைஞர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான கருவிகள் வழங்கப்படும். 10,000 கலைஞர்கள் இதன் மூலம் பயனடைகின்றனர். கைவினைக்கலைக்களுக்கு என்று தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. அதில் சேர்ந்து பயிற்சி பெற்று இதனைத் தொழிலாக மாற்றிக்கொள்ளலாம். பயிற்சி காலத்தில் ரூ.7,500/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசால் சுவாமிமலை மற்றும் ஈரோடு பகுதியில் வெண்கலம் சிலைகள் செய்ய ரூ.30 லட்சம் செலவில் 3 வருடங்கள் பயிற்சி அளிக்கும் திட்டம். 100 பெண்களுக்கு ரூ.83 லட்சம் செலவில் தஞ்சாவூர் ஓவியம் வரையப் பயிற்சி அளிக்கும் திட்டம். அதே போல், ரூ.80 லட்சம் செலவில் காகித மேச் பயிற்சி 50 பெண்களுக்கு அளிக்கும் திட்டம் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு ரூ.16 லட்ச செலவில் காகித மேச் பயிற்சி போன்ற திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி அளிக்கும் இடங்கள்:
வெண்கல்லைப் பொருட்களைச் செய்யச் சுவாமிமலை, கும்பகோணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பித்தளை விளக்கு செய்ய நாச்சியார் கோவில்,கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் தட்டு செய்யப் பயிற்சி தஞ்சாவூரில் வழங்கப்படுகிறது. மரக்கடைசல் செய்ய கள்ளக்குறிச்சி, அரும்பாவூர், தம்மம்பட்டி மற்றும் சின்னசேலம் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
சந்தனமரக்கடைசல் செய்ய கள்ளக்குறிச்சியிலும் கற்சிற்பம் செய்ய மாமல்லபுரம், நாமக்கல் மற்றும் கோவை ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போல், டெரகோட்டா, பாய் முடைதல், பனையோலை, கடற்சிப்பிகள், செயற்கை இழை(பையர்), நகைகள் செய்தல் போன்ற கைவினைப்பொருட்கள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறிப்பாக, நாச்சியார் வெண்கல விளக்குகள் புதிய வடிவமைப்புகளில் உருவாக்கம் மூன்று மாத பயிற்சி தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவிலில் வழங்கப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கத்தில், தஞ்சாவூர் ஓவியம் வரைதல் தொடர்பாகப் பெண்களுக்கான ஒரு வருடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பெரும் பெண்களுக்கு ரூ.2000/- பிழைப்பூதியமும், மூலப்பொருட்களும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் மரவேலைப்பாடுகள் தொடர்பாக 1 வருடப் பயிற்சி ரூ.2000/- பிழைப்பூதியமும் மற்றும் மூலப்பொருட்களுடன் சின்ன சேலத்தில் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் தட்டு தயார் செய்ய மயிலாடுதுறை பூம்புகாரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதே போல், மூங்கிலைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்யத் திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்களும் கைவினைப்பொருட்கள் தாயார் செய்யப் பயிற்சி அளிக்கின்றனர். கைவினைப்பொருட்களில் உள்ள பல்வேறு சிறப்புப் பொருட்களுக்கான சான்றிதழ் படிப்பினை முடித்து சான்றிதழ் பெறுவதன் மூலம் தொழில் தொடங்க மற்றும் தயார் செய்த பொருட்களை விற்பனை செய்யப் பயனுள்ளதாக இருக்கும்.
நிதி உதவி :
கைவினைஞர்கள் தயாரிப்புகளைக் கண்காட்சி மூலம் சந்தைப்படுத்துவதற்கென ரூ.50,00,000/- நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 200 கலைஞர்கள் பயன்பெறுகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.25,000/- கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்திட ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.50,000/- வழங்கப்படுகிறது.
மேலும் தொழில்முனைவோர்களுக்கு என்று வங்கியில் வழங்கப்படும் கடன் உதவியும் கைவினைப்பொருட்கள் வியாபாரத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.
கைவினைப்பொருட்கள் செய்ய கற்று கொள்ளவதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன?
டிசைனர் மற்றும் ஸ்கெட்சர், டிரில் மெஷின் ஆபரேட்டர், கணினிடிசைனர், மிக்சிங் ஆப்ரேட்டர், லேப் அசிஸ்டென்ட், துறை ஆய்வாளர், சில்வர் கோட்டிங் டெங்னீசியன், தரம் நிர்ணயிக்கும் சூப்பர் வைசர் போன்ற பணிகளை நிறுவனங்களில் பெறலாம்.
மேலும் சரியான முறையில் பயிற்சி பெருப்பவர்கள் சிறிய அளவில் வீட்டில் இருந்தபடியே கூட தொழில் தொடங்கலாம்.
கைவினைப்பொருட்களை விற்பனை செய்வது எப்படி?
கைவினைஞர்களுக்கான தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்கழகம் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கழகத்தின் வணிக நிறுவனமாகப் பூம்புகார் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் கைவினைப் பொருட்களில் பெரும்பாலானவை பூம்புகார் நிறுவனத்தின் வாயிலாகச் சந்தைப்படுத்தப்படுகின்றது. கைவினைப்பொருட்கள் மற்றும் கார்பெட் துறைதிறன் கவுன்சில் மற்றும் PMKVY ஆகிய நிறுவனங்கள் மூலம் கைவினைஞர்கள் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்தலாம்.
இவை பொருட்களில் தரத்தை மேம்படுத்த, தகுந்த பயிற்சி அளிக்க மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கச் செயல்படுகின்றனர். மேலும் கைவினைஞர்களுக்கு சமூக, பொருளாதார பாதுகாப்பு அளித்தல் மற்றும் சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் வழங்குதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
கைவினைஞர்களுக்கு வழங்கும் விருதுகள்:
பூம்புகார் மாநில விருது, பூம்புகார் மாவட்ட கலை விருது, Gen Next Competition மற்றும் Living Craft Treasure போன்ற விருதுகள் கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment