பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம்.
அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும். குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும்.
அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது.
குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.
குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்.
குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம். அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.
மன அழுத்தத்தை குறைக்கும்
பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.
குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம்.
மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.
உற்சாகத்தை தூண்டும் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும். தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.
0 Comments:
Post a Comment