எண்ணற்ற டூரிஸ்ட் ஸ்பாட்களை கொண்டுள்ள இந்தியாவில் பிரபலமான பல இடங்கள் ஆண்டு முழுவதும் கூட்டமாகவே தான் காணப்படுகின்றன. எனினும் கூட்டம் அதிகம் இல்லாத அதே சமயம் மிகவும் அழகான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களுக்கு செல்ல பலர் விரும்புகிறார்கள்.
மக்கள் கூட்டத்தில் கலந்து கூட்டத்தில் ஒருவராக இயற்கை அழகை ரசிப்பதை விட, கூட்டம் அதிகம் இல்லாத சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கிருப்பவற்றை ரசிப்பது சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன் மனநிம்மதியையும் சேர்த்து தரும். அந்த வகையில் நீங்கள் இனிவரும் காலங்களில் பிளான் செய்ய வேண்டிய கூட்டம் அதிகம் இல்லாத அதே நேரம் குறைத்து மதிப்பிடப்பட்ட சில அற்புத டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களை பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
மாண்டு (மத்திய பிரதேசம்) : ஆப்கானிஸ்தான் கட்டிடக்கலைக்கு இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளின் தாயகமாக மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மாண்டு (Mandu) இருக்கிறது. ஒரு பழங்கால நகரமான மாண்டு மேற்கு மத்தியப் பிரதேசத்தின் மால்வா பகுதியின் தார் நகரிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காலத்தால் அழியாத நினைவுச்சின்ன அழகுகள், பிரமாண்டமான அரண்மனைகள் மற்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நுழைவாயில்கள் மாண்டுவின் வளமான மற்றும் நீண்ட வரலாற்றுக்கு சாட்சியாக இங்கு நிற்கின்றன. நீங்கள் இங்கு சுற்றுலா வர திட்டமிட்டால் ஜஹாஸ் மஹால், ஹோஷாங் ஷா கல்லறை, பாஸ் பகதூர் அரண்மனை மற்றும் இன்னும் இருக்கும் பல இடங்களை காண தவறாதீர்கள்.
பதான் (குஜராத்) : குஜராத் மாநிலத்தில் உள்ள அழகான பழங்கால வரலாற்று நகரங்களில் ஒன்று பதான். நீங்கள் ஒரு வரலாற்று ஆர்வலர் என்றால் கட்டாயம் இந்த இடத்தை மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும். சௌதா நாட்டு அரசன் வனராஜன் சௌதா என்பவரால் கிமு 745-ல் கோட்டையுடன் இந்த நகரம் கட்டப்பட்டது. சுமார் 650 ஆண்டுகள் குஜராத்தின் தலைநகராக இருந்த கோட்டை நகரம் இது. குஜராத்தின் முன்னாள் தலைநகராக இருந்த பதான் உலகின் மிகச்சிறந்த கையால் செய்யப்பட்ட ஜவுளிகளில் ஒன்றான படோலா புடவைகளுக்கு பிரபலமான இடமாகும். இங்கே மிகவும் குறுகலான பாதைகளில் மார்க்கெட்கள்அமைந்துள்ளன. ராணி கி வாவ் (படிக்கட்டுக் கிணறு), அற்புதமான ஜெயின் கோவில்கள் மற்றும் பல இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்கள்.
உனகோடி (திரிபுரா) : அகர்தலாவில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் அமைந்துள்ள Unakoti-யில் 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுமார் லட்சக்கணக்கான செதுக்கப்பட்ட உருவங்கள் உள்ளன. இது ஒரு பழமையான சைவத்தலமாகும். வடகிழக்கு இந்தியாவில் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களில் இதுவும் ஒன்றாகும். யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் உனகோடி இடம் பிடித்துள்ளது. ட்ரெக்கிங், ஹைக்கிங் மற்றும் பலவற்றுக்கு ஏற்ற இடமாக இது இருக்கிறது. பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களும், கற்சிற்பங்களுமாக இந்த பகுதி காட்சியளிக்கிறது.
காஸ் மலர் பீடபூமி (சதாரா) : மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பூக்கள் நிறைந்த இந்த பீடபூமி வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தாலும் வார நாட்களில் சென்றால் கண்களுக்கான விருந்தை, பசுமையை நன்றாக அனுபவிக்கலாம். இந்த இடம் கடந்த ஜூன் 2012-ல் யுனெஸ்கோவால் உயிர் பன்முகத்தன்மை தளமாக (bio-diversity site) அறிவிக்கப்பட்டது.
லம்பசிங்கி (ஆந்திரா) : தென்னிந்தியாவின் காஷ்மீர்நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருக்கிறது. ஆந்திராவின் Lambasingi என்ற இடம் தான் இந்த பெருமையை பெற்றுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகவும் குளிரான இந்த பகுதியின் சராசரி 0 -10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் டூர் செல்ல சிறந்த இடமாகவும், வெப்ப அலைகளில் இருந்து தப்பிக்கவும் உதவுகிறது. பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகளின் தாயகமாக மற்றும் மாசற்ற இயற்கை அழகை கொண்டதாக இந்த லம்பசிங்கி பகுதி இருக்கிறது.
தவாங் (அருணாச்சலப் பிரதேசம்) : நீங்கள் பிரபலமான டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களுக்கு செல்வதை தவிர்க்க விரும்பினால் அதற்கு இணையாக அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் தவாங் பகுதிக்கு டூர் செல்லலாம். பசுமையால் சூழப்பட்ட மற்றும் அழகான ஏரிகள் நிறைந்த இந்த இடம் நிச்சயமாக உங்களை உற்சாகமாக வைக்குமே தவிர ஏமாற்றாது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி, இயற்கை அழகிற்காக மட்டுமல்லாமல், 400 ஆண்டுகள் பழமையான மடாலயத்திற்கும் பிரபலமானது. புத்த மடாலயங்களில் ஒன்றான தவாங் மடாலயம் (Tawang Monastery) ஒரு முக்கிய யாத்திரை மையமாக திகழ்கிறது.
No comments:
Post a Comment