Search

பிப்ரவரி மாதத்தில் டூர் ப்ளான் இருக்கா..? கோவா முதல் தாஜ்மஹால் வரை.. பட்ஜெட்டில் விசிட் அடிக்கலாம்

 சுற்றுலா என்பது ஒவ்வொருவருக்கும் மன நிம்மதியைக் கொடுக்கும் சுவாரஸ்சியமான அனுபவம். எத்தகைய பணிச்சுமைகள் மற்றும் மனஉளைச்சல்கள் இருந்தாலும் இயற்கையோடு நாம் பயணிக்கும் போது அத்தனையும் மறந்து சிறு குழந்தையாய் சுற்றித் திரிவோம். இந்த மனநிலையோடும், குறைந்த செலவிலும் அடுத்த மாதம் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் இதோ இந்த இடங்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இதோ எந்தெந்த இடங்கள் என இங்கே அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

கோவா : இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சிறிய மாநிலம் தான் கோவா. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ள இங்கு பிப்ரவரி மாதத்தில் செல்லும் போது அதிக செலவாகாது. சீசன் இல்லாததால் மலிவான விலையில் விமானங்கள், தங்குமிடம் மற்றும் சாப்பாடு அனைத்தும் விலை மலிவானதாக இருக்கும். எப்போதும் போல பீச்சில் ஆட்டம் போட்டு விட்டு கோவாவின் அழகை ரசிக்கலாம்.இது மட்டுமின்றி இந்தியாவின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான கோவா திருவிழாவும் பிப்ரவரியில் தான் நடைபெறும். பிப்ரவரி 18- 21 முதல் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமானோர் விதவிதமான வேடம் அணிந்து ஊர்வலமாக வருவார்கள். நல்ல கொண்டாட்டங்களுடன் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இருக்கும்.

ஷில்லாங், மேகாலயா :
 கடல் மட்டத்திலிருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ள நகரம் தான் வடகிழக்கு இந்தியாவில் உள்ள ஷில்லாங். மலைகள் என்றாலே எப்போதும் கண்களுக்கு விருந்தாகவே இருக்கும். ஆனால் இங்குள்ள முக்கிய சிறப்பு என்பது உம்ங்கோட் நதி எனப்படும் டாவ்கி நதி. உலகின் தூய்மையான நதிகளில் ஒன்றாக இது உள்ளது. வருடத்தில் எந்த நேரத்திலும் இந்த நதி மிகவும் தூய்மையாகவே தெரியும். இருந்தப்போதும் பிப்ரவரி மாதம் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. நதியின் கீழே உள்ள கற்பாறைகள், பாசிகள் என அனைத்தும் கண்ணாடி போல நமது கண்களுக்குக் காட்சியளிக்கும்.

ஜோத்பூர், ராஜஸ்தான் : ராஜஸ்தான் என்றாலே பாலைவனம் மற்றும் கோட்டைகள் தான் நமது கண்களுக்கு முதலில் தெரியவரும். இதன் அழகை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் அதிக குளிருக்கும், அதிக வெயிலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உள்ள பிப்ரவரி மாதம். லேசான வெப்பநிலையோடு ராஜஸ்தானின் முழு அழகையும் ரசிக்கலாம்.

மும்பை, மகாராஷ்டிரா : இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. மற்ற மாதங்களைப் போல் இல்லாமல் பிப்ரவரி மாதத்தில் நீங்கள் செல்லும் போது அங்கு வருடாந்திர கலா கோடா திருவிழா என்பது பிப்ரவரி 4- 12 வரை நடைபெறும். இதோடு யுனெஸ்கோவின் உலக பாரம்பரியமிக்க யானை குகைககளில் பிப்ரவரி 13- 15 ஆகிய தேதிகளில் யானைத் திருவிழா நடைபெறும். இது சுற்றுலா பயணிகளுக்கு வியப்பை ஏற்படுத்தும்.

சூரஜ்குண்ட், ஹரியானா : இந்தியாவின் வளமான மற்றும் நாட்டுப்புற மற்றும் கலாச்சார பராம்பரியத்தை அனுபவிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது ஹரியானாவில் உள்ள சூரஜ்குண்ட். இதோடு இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெறும் வருடாந்திர கைவினை கண்காட்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஆக்ரா, உத்தர பிரதேசம் : காதலர்களின் நினைவு சின்னமாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம். பளிங்கு கற்களால் ஆன கோட்டையை வியந்துப்பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். இதோடு பிப்ரவரி மாதத்தில் 18- 27 ஆம் தேதி வரை இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தாஜ் மஹாத்சவ் விழா கொண்டாடப்படுகிறது.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் : கடலுக்கு நடுவில் உள்ள தீவுகள் என்றாலே பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும். அதிலும் மிகவும் புகழ்பெற்றது அந்தமான் நிகோபார் தீவுகள் என்றே கூறலாம். இங்கு பிப்ரவரி மாதத்தில் வானிலை மிகவும் அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

கூர்க், கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று தான் கூர்க். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடங்கள் பிப்ரவரி மாதத்தில் கண்கவர் காட்சியாக இருக்கும். இங்குள்ள இயற்கையின் அழகு, மரங்கள்,விலங்குகள் அனைத்தும் இந்த நேரத்தில் உயிர்ப்புடன் நமது கண்களுக்கு காட்சியளிக்கும்.

நாசிக், மகாராஷ்டிரா : மாகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் உள்ள புகழ் பெற்ற சூலா திராட்சைத் தோட்டம் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம். நேரடியாக திராட்சைத் தோட்டத்திற்கு விசிட் செய்து உங்களுக்குப் பிடித்த பழங்களை நீங்கள் ருசித்துப் பார்க்கலாம். பார்ப்பதற்கும் இந்த இடங்கள் கண்களைக் கொள்ளைக் கொள்ளும் அளவிற்கு இருக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment