Anganwadi Jobs updates: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில், ஒப்புதல் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள்(Aganwadi Workers) எண்ணிக்கையில் 1,27,891 இடங்கள் நிரப்பபடாமல் உள்ளன என்றும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர்கள்(Aganwadi Helpers) பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி சேவைகள் : 1975ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மைய நாடியாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ். 49,499 முதன்மை அங்கன்வாடி மையங்கள், 4940 குறு அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 54,439 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 13.9 லட்சமாக உள்ளன.
ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும், அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் ஆகிய இரண்டு பதவிகள் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 150-300க்கும் கீழ் இருக்கும் குறு அங்கன்வாடி மையத்திற்கு ஒரே ஒரு அங்கன்வாடி பணியாளர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலியிடங்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பதிலளித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் 54,439 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும், 49,499 உதவியாளர் இடங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 40,036 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பதவிகளிலும் கிட்டத்தட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
தேசிய அளவில், 1, 27,891 அங்கன்வாடி பணியாளர் இடங்களும், 1,14,287 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்ப்டாமல் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் | 12.7.2018 அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள் | 30.06.2022 அன்று வரை நிரப்பப்பட்ட இடங்கள் |
அங்கன்வாடி பணியாளர் - 54,439 | 49,109 | 44,628 |
அங்கன்வாடி உதவியாளர் 49,499 | 43, 954 | 40,036 |
கடந்த 2019ம் ஆண்டு, இதேபோன்று எழுப்பப்பட்ட போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களில் 49,109 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களும், 43, 954 உதவியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், பொது மாறுதல் மூலம் கலந்தாய்வு நடத்திட வேண்டும், பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Click here for latest employment news
No comments:
Post a Comment