வயிறு உப்புசம் மிகவும் பொதுவானது மற்றும் நம்மில் பலர் பல சந்தர்ப்பங்களில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நேரங்களில் வாயு மற்றும் வலியுடன் ஏற்படும் ஒரு அசௌகரிய நிலை வயிறு உப்புசம் எனப்படுகிறது. நம் வயிற்றில் அதிகமான வாயு அல்லது நீர் இருக்கும் போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதோடு அடிக்கடி இதுபோன்று வயிற்று பிரச்சனைகள் ஏற்படுவது அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளின் அடையாளமாக இருக்கலாம். உப்புசமானது நமது உணவுப் பழக்கவழக்கங்களுடன் நேரடி தொடர்புடையது மற்றும் நாம் சாப்பிடும் உணவுகளை பொறுத்தது.
பால், ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர் போன்ற பல உணவுகள் வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும் என்பதால், நாம் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். உப்புசத்திற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று குடல் வீக்கம். காற்று மாசுபாடு, புகைபழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுப்பது, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. இது முடிவில் உப்புசம் போன்ற கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் வயிறு உப்புசத்தை தவிர்க்க விரும்பினால் உங்கள் டயட்டில் பின்வரும் உணவுகள் மற்றும் பானங்களை சேர்த்து கொள்ளுங்கள்.
வெள்ளரி : ஒரு பச்சை வெள்ளரியில் சுமார் 95% தண்ணீர் அடங்கி இருக்கிறது மற்றும் உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க ஒரு சிறந்த உணவாகும். வெள்ளரிகள் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. தவிர மலச்சிக்கலை தடுக்கும் மற்றும் குடல் இயக்கத்திற்கு உதவும் நார்ச்சத்தும் வெள்ளரிகளில் அடங்கி இருக்கிறது. எனவே உங்கள் டயட்டில் வெள்ளரித் துண்டுகளைச் சேர்த்து கொள்ளுங்கள்.
அன்னாசி பழம் : அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் பி வைட்டமின்ஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசியில் புரோமிலைன் என்ற நொதி உள்ளது, இது சரியான செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலம் வயிறு உப்புசத்தை குறைக்க உதவும். மேலும் அன்னாசி வயிற்றில் உள்ள புரதங்களை உடைத்து செரிமானத்திற்கு உதவும் இயற்கையான செரிமான நொதியை கொண்ட நீர் அடர்த்தி மிகுந்த பழமாகும்.
பெருஞ்சீரக விதைகள் : சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம் விதைகளில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை குடல் தசைகளை தளர்த்தவும், வாயுவை வெளியேற்றவும் உதவுகின்றன. தவிர செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து விதைகளை வடிகட்டி, உங்கள் உணவுக்கு இடையில் இந்த தண்ணீரை பருகவும்.
கிரீன் டீ : வழக்கமாக குடிக்கும் காபி அல்லது டீ-க்கு பதில் கிரீன் டீ-யை குடிப்பது உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க மற்றும் உடலில் நீர் தேங்குவதை தடுக்க உதவுகிறது. கிரீன் டீ-யில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக போராடுகிறது மற்றும் உப்புசத்திற்கு எதிராக வேலை செய்கிறது. கிரீன் டீ-யில் உள்ள காஃபின் மூலப்பொருள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் செரிமான மண்டலத்தின் சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது.
அவகடோ: பட்டர் ஃப்ரூட் என்று குறிப்பிடப்படும் அவகடோ பழத்தில் என்னற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த பழங்கள் ஃபோலேட் (வைட்டமின் பி9), வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த பழத்தில் நிறைந்திருக்கும் அதிக பொட்டாசியம் உடலில் சோடியம் சமநிலையை ஒழுங்குபடுத்தி வயிற்றில் தண்ணீர் தேங்குவதை தடுக்கிறது. அவகடோவில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் உப்புசத்தை தடுக்க உதவுகிறது. மதிய உணவில் இந்தப் பழத்தின் ஒரு பீஸ் சாப்பிட்டால் கூட நன்மை அளிக்கும்.
No comments:
Post a Comment