வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் விடா முயற்சி, தன்னம்பிக்கை போன்றவை அவசியம். அதே சமயம், நம் மனதில் தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால் வளர்ச்சியை நோக்கிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் மனநல நிபுணர் கரோல் தேவக். “கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளும் பண்பு போன்றவற்றுடன் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும்” என்கிறார் அவர். எந்தவொரு முயற்சியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இது ஊக்குவிக்குமாம். இந்த வழிமுறையை பின்பற்றும்போது நமக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
வளர்ச்சியை முன்னிறுத்திய தன்னம்பிக்கை நமக்குள் உருவாகி விட்டால், எளிமையாக கிடைக்கின்ற விஷயங்களை புறந்தள்ளிவிட்டு, புத்தம்புது சவால்களை ஏற்க மனம் தயாராகும். ஏதோ ஒரு விஷயம் கடினமாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்து விடாமல், அதில் உள்ள சவாலை ஏற்று கொண்டு, தடைகளை தாண்டி அதை பூர்த்தி செய்ய மனம் விரும்பும்.
தோல்விகளை கண்டு உங்கள் மனம் உடைந்து போகாது. அதில் இருந்து அனுபவங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக கருதுவீர்கள். மேலும் தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். வளர்ச்சி மனநிலையை உருவாக்கிக் கொள்ளும்போது நம் மனம் நீண்டகால இலக்குகளை நோக்கி பயணிக்கும் மற்றும் மிகக் கடினமான சூழல்களை கூட எதிர்த்து நிற்கும் பக்குவத்தை வளர்க்கும்.
பலம், பலவீனங்களை உணர்ந்து கொள்வது : நாம் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும், நம் மனதில் வளர்ச்சியை நோக்கிய பாதையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், முதலில் நம்மிடையே உள்ள பலம் மற்றும் பலவீனங்களை உணர்ந்து கொள்ள பழக வேண்டும். நம்மை நாம் உணர்ந்தால்தான் பலவீனமான விஷயங்களை மேம்படுத்த முடியும்.
இலக்கு நிர்ணயம் : எதார்த்த உலகில் சாத்தியமுள்ள இலக்குகளை நிர்ணயம் செய்து அதை நோக்கி பயணிப்பது புத்திசாலித்தனம் ஆகும். நடக்காத ஒன்றை கற்பனை செய்துவிட்டு, அப்படியே ஒதுங்கி விடுவதைக் காட்டிலும், இது நடக்கும், நடக்க வேண்டும் என்ற மன உறுதியோடு திட்டமிட்டு அதற்கேற்ப செயல்படலாம்.
தோல்வியை ஏற்க வேண்டும் : வாழ்வின் அனைத்து தருணங்களிலும் வெற்றி கண்டுவிட முடியாது. ஏதோ சில தருணங்களில் சில தவறுகள் காரணமாக தோல்வி ஏற்படுவது இயல்பானதுதான். அதைக் கண்டு மனம் உடைந்து விடாமல் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும். எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து பக்குவப்பட வேண்டும்.
பிறரின் கருத்தறிய வேண்டும் : நாம் மட்டுமே புத்திசாலி, நமக்கு எல்லாமே தெரியும் என்ற மமதையில் இருக்க முடியாது. ஒவ்வொரு சந்தர்பத்திலும் வெவ்வேறு மக்களிடம் இருந்து நாம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். கேட்டறிந்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமானதாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும் அனுபவஸ்தர்களின் கருத்து நமக்கு பேருதவியாக அமையும்.
புதிய சவால்களை ஏற்பது : ஒரு பாதுகாப்பான வட்டத்திற்குள் அமர்ந்து கொள்வது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்து புதிய சவால்களை ஏற்க பழக வேண்டும். புதிய சவாலுக்கு ஏற்ற வகையில் நமது நம்பிக்கை மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட, நம்மைச் சுற்றியிலும் எதிர்மறை சிந்தனை உள்ளவர்களை வைத்துக் கொள்ளக் கூடாது. நேர்மறை சிந்தனை கொண்டவர்களை வைத்துக் கொண்டால் வெற்றியை நோக்கிய ஊக்கம் கிடைக்கும்.
No comments:
Post a Comment