ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, யோகா என்பது நம் நாட்டின் பாரம்பரியமாக, அறிவியலாக மற்றும் வாழ்க்கை முறையாக இருந்துள்ளது. நமது உடல், மனம், ஆத்மா ஆகியவற்றை மேம்படுத்தும் வழிமுறைகளை கொண்டதாக இருக்கும் யோகா உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யோகா என்பது முழு உடல் பயிற்சியாக செயல்படுகிறது. யோகா ஒரு சக்திவாய்ந்த பாரம்பரிய கருவியாகும், இது நெகிழ்ச்சியை உருவாக்கி, மனதை சமநிலை படுத்த உதவுகிறது மேலும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இத்தகைய யோகா கலையை அனைவரும் கடைபிடிக்கிறோமா என்றால் அது இல்லை காரணம், மாறிப்போன நம் அன்றாட வாழ்க்கை முறை. கூடுதல் பணிச்சுமை, இரவுப்பணி, வேலைக்கு அதிக தூரம் சென்றுவருவது போன்ற காரணங்களால் நம்மில் பலர் யோகா போன்ற உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்க மறுத்து, இன்றைய கால சூழலில் வயது வித்தியாசம் இன்றி வரும் பல்வேறு நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறோம். எனவே உங்கள் தினசரி வழக்கத்தில் யோகாவைச் சேர்ப்பது சில நேரங்களில் கடினமாக இருந்தால், அதை தொடர்ந்து செய்ய உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முறையான யோகா வகுப்பில் சேரலாம் : யோகா வகுப்புக்கு செல்ல நீங்கள் பதிவுசெய்தவுடன், உங்கள் யோகா பயிற்சிகளில் அதிக அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள். உங்கள் யோகா பயிற்றுவிப்பாளரிடம் உங்கள் வேலை நேரத்திற்கு ஏற்றவாறு வகுப்பின் நேரத்தை மாற்றியமைக்க கேட்கலாம். இதனால் நீங்கள் எந்த வகுப்பையும் தவறவிடாது தொடர் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
முன்கூட்டியே திட்டமிடுதல் : உங்கள் வேலை நேர அட்டவணை மற்றும் பிற பொறுப்புகளுக்கு ஏற்றவாறு, உங்கள் யோகா அமர்வுகளை காலை அல்லது மாலையில் செய்ய திட்டமிடுங்கள். நீங்கள் ஏற்கனவே செய்யும் உடற்பயிற்சியில் யோகா செய்வதற்கான நேரத்தை சேர்க்க முயற்சிக்கவும். உங்கள் நாளில் எப்போது யோகா பயிற்சி செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். புதிதாக ஒன்றைத் தொடங்கும்போது, முன்கூட்டியே உங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது முக்கியம்.
யோகா செய்ய நேரம் ஒதுக்குங்கள் : ஒரு பழக்கத்தை உருவாக்குவதற்குத் தேவையானது நிலைத்தன்மையே. எனவே, இரண்டு வாரங்கள் தொடர்ந்து யோகாவிற்கு நேரம் கிடைத்தால், அது நாளடைவில் நமது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறும். எனவே யோகாசனங்களைப் பயிற்சி செய்ய ஒவ்வொரு நாளும் 10 முதல் 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள். காலையிலோ, மதிய உணவு இடைவேளையிலோ அல்லது மாலையிலோ தொடங்கலாம்.
அமர்ந்தவாறு வேலை செய்பவர்கள் : நீங்கள் நாள் முழுவதும் ஒரு மேசையில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தாலும் சரி உங்கள் உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே உங்கள் வேலையை பார்த்துகொண்டே நீங்கள் யோகா செய்ய பல்வேறு போஸ்கள் உள்ளன. யோகாவில், பூனை போல் அமர்ந்து செய்யும் யோகா முதுகெலும்புகளை வலுவாக்கும் மேலும் இது உங்கள் முதுகில் தோன்றும் வலியை கட்டுப்படுத்துகிறது. நின்று கொண்டு எளிதாக செய்யக்கூடிய யோகா போஸ்களையும் நீங்கள் முயற்சி செய்து, பணியில் இருந்தவாறு கூட யோகா பயிற்சிகளை தொடங்கலாம்.
சந்தோஷமாகவும் ஈடுபாட்டுடன் செய்வது : யோகா செய்வதை சுவாரஸ்யமாக மாற்றுவது சிறந்தது. நீங்கள் யோகாவை மிகவும் வேடிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் செய்தால், அது உங்களுக்கு ஒரு கட்டாயப்படுத்தும் எண்ணத்தை ஏற்படுத்தாது. யோகா பயிற்சியை அனுபவித்து, உங்கள் உடல் மற்றும் மனநிலையில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நிலைகளில் யோகாவை செய்வதன் மூலம் சளிப்படையமாட்டீர்கள்.
No comments:
Post a Comment