Search

காஃபி குடித்துவிட்டு மாத்திரை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்?

 ஒரு குவளை காஃபி இல்லாமல் ஒரு நாளைத் தொடங்குவது என்பது நம்மில் பலராலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

ஆனால், சில மருந்துகளை காஃபின் கொண்ட திரவங்களுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

காஃபினுடன் எதிர்வினையாற்றக் கூடிய வகையில் ஏறக்குறைய 60 மருந்துகள் இருப்பதாகக் கூறுகிறார் மாட்ரிட்டின் தன்னாட்சி பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியரான அன்டோனியோ ஜேவியர் கார்காஸ் சான்சுவான். எனினும், இந்த எதிர்வினைகள் மிதமானவை என்றும் அவர் கூறுகிறார்.

நாம் உட்கொள்ளும் மருந்து உடலுக்குள் பயணித்து வயிறு மற்றும் குடலை அடைகிறது. அங்கிருந்து ரத்தத்தில் கலந்து முழு உடலுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.

"ஒரு மருந்து எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அந்த இலக்கை அடைய உரிய இடத்திற்கு செல்ல வேண்டும்" என்கிறார் நவர்ரா பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியரான எலினா புஏர்டா ரூயிஸ் டி அசுவா.

ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புள்ளியாக அந்த இலக்கை நினைத்துப் பாருங்கள். நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து அந்தப் புள்ளியில் அதன் விளைவை ஏற்படுத்தும்.

அதற்கு அந்த மருந்து முழுமையாக உறிஞ்சப்பட்டு உடல் முழுவதும் திறம்பட விநியோகிக்கப்பட வேண்டும். மருந்தின் இந்தப் பயணத்தோடு காஃபின் கலந்தால் என்ன நடக்கும் என்பது நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் அதன் பயன்பாடைப் பொறுத்தது.

மூளையில் ஏற்படும் விளைவு

காஃபின் மத்திய நரம்பு மண்டலத்தை தூண்டக்கூடியது. மயக்கம் அல்லது அமைதிப்படுத்தும் தன்மை கொண்ட மருந்தோடு காபி அல்லது காஃபின் கொண்ட பானம் கலப்பது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இவை இரண்டும் எதிர்விளைவுகள் கொண்டவை. உதாரணமாக, கவலை மற்றும் தூக்கமின்மைக்கு பயன்படுத்தும் பென்சோடியாசெபைன்கள் வகை மருந்துகளை காஃபியுடன் எடுத்துக் கொள்ளக்கூடாது. "மருந்து மூளையைச் சென்றடையும் அதே நேரத்தில் காஃபினும் மூளையை அடையும்" என்கிறார் புஏர்டா. பின்னர் நீங்கள் ஒருபுறம் காஃபினின் தூண்டலையும், மறுபுறம் மருந்தின் செயலையும் பெறுவீர்கள் எனக் கூறும் புஏர்டா, காபி அல்லது கோலாவில் உள்ள மூலக்கூறுகள் மருந்துகள் என்ன செய்ய முயல்கின்றனவோ அதற்கு நேர்மாறாக செயல்படும் என்கிறார்.

கல்லீரலில் ஏற்படும் விளைவு.

கல்லீரலில் காஃபின் சிதைவடைய என்ன நொதியைப் பயன்படுத்துமோ அதே நொதியை சில மருந்துகள் பயன்படுத்தும். இதனால் கல்லீரல் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்பட்டு உடலில் தேவையான அளவைவிட அதிக அளவில் மருந்துகள் சேர வாய்ப்புகள் உள்ளன. "சில மருந்துகளுக்கு பிளாஸ்மா செறிவு அதிகரிப்பு பிரச்னைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஸ்கிசோஃப்ரினியா போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளுக்கு மருந்தின் செறிவு சரியாக இருப்பது அவசியம். இந்த மாற்றம் ஆபத்தை ஏற்படுத்தும்" என எச்சரிக்கிறார் புஏர்டா. மருந்தின் வீரியத்தை அதிகரித்தோ அல்லது குறைத்தோ மருந்தின் செயல்பாட்டில் காஃபினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிறார் பேராசிரியர் கார்காஸ். இந்த செயல்முறைக்கு காரணமான நொதியின் செயல்பாட்டைத் தடுத்து காஃபினின் வளர்சிதை மாற்றத்தை தடுக்கும் சில மருந்துகளும் உள்ளன.

குயினோலோன்ஸ் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பு (antibiotics ) மருந்துகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ’’இத்தகைய மருந்துகளை காஃபினின் வளர்சிதை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதால் உடலில் இருக்கும் காஃபினின் அளவு அதிகரிக்கிறது. இதனால் காஃபினின் விளைவுகள் அதிகமாக இருக்கும்’’ என்கிறார் பேராசிரியர் கார்காஸ்.

உறிஞ்சப்படுதலில் சிக்கல்

ஹைப்போ தைராய்டிற்கான மருந்து போன்ற சில மருந்துகளை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கப்படுகிறது. "உணவு அல்லது காஃபி உட்கொள்ளாமல் தைராக்ஸினை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது அவசியம். குடலில் மருந்து முழுமையாக உறிஞ்சப்படுவதற்கு ஏதுவாக காலை உணவை தள்ளிவைக்க வேண்டும். அதன் மூலம் நம் உடலில் ஹார்மோன்கள் உரிய அளவை எட்டுகின்றன’’என்கிறார் புஏர்டா. வயிறு மற்றும் குடலில் உணவு இருப்பது சில மருந்துகள் உறிஞ்சப்படுவதற்கு தடங்கலாக இருக்கலாம். ’’பரிந்துரைக்கப்பட்ட அளவை எடுத்தாலும் நம் உடல் முழுமையாக அவற்றை உறிஞ்சவில்லை என்றால் உரிய பலன் கிடைக்காது’’ என்கிறார் புஏர்டா.

காஃபியில் பால் பொருட்கள்

நீங்கள் அருந்தும் காஃபியில் காஃபின் குறைவு, பால்தான் அதிகம் என்று நினைக்காதீர்கள். ஆன்டிபயாடிக் டெட்ராசைக்ளின் பாலுடன் சிக்கலாக வினைபுரிந்து, பால் உறிஞ்சப்படுதலைத் தடுப்பதாகக் கூறுகிறார் புவேர்டா. இந்த சிக்கல், இரைப்பை மற்றும் ரத்தத்தில் மருந்து உறிஞ்சப்படாமல் மலமாக வெளியேறும் வரை முழு செரிமான மண்டலத்திலும் நீடிப்பதாகவும் அவர் கூறுகிறார். இந்த வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளை பால் பொருட்களுடன் உட்கொண்டால், அவை கால்சியத்துடன் கலந்து செலேட்டுகள் எனும் கலவையை உருவாக்குகிறது. செலேட்டுகள் குடலில் உறிஞ்சப்படாது. எனவே உட்கொண்ட மருந்தால் உடலுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. சில மருந்துகளின் உறிஞ்சுதலை கோலா பானங்களும் பாதிக்கலாம் என்கிறார் பேராசிரியர் கார்காஸ்.

வழிகாட்டுதலை பின்பற்றுங்கள்

மத்திய நரம்பு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டால் காஃபி அருந்துவது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுறையைப் பின்பற்றுவது நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம் எனக் கூறும் புஏர்டா, வீட்டில் உருவாக்கப்படும் மருந்துகளை மறந்துவிடுங்கள், ஒரு மருந்தை தண்ணீரில் கரைக்க வேண்டும் என்றால் தண்ணீரில் மட்டுமே கரைக்க வேண்டும், அதை பழச்சாறு அல்லது பிற திரவத்தில் கரைக்கக் கூடாது என்கிறார். காஃபியுடன் எடுத்துக் கொள்வதால் எந்தப் பிரச்னையும் இல்லாத மருந்துகளும் உள்ளன. எனவே ஒவ்வொரு மருந்தை எடுத்துக் கொள்ளும் போதும் அது குறித்து மருத்துவர்களிடம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். ’’பொதுவாகவே, காஃபியை மிதமான அளவில் அருந்துவது முக்கியம்’’ என்கிறார் பேராசிரியர் கார்காஸ்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment