தொழில் தொடங்கி இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. ஆனால் அந்த தொழில் தொடங்குவதற்கு முதலில் தன்னம்பிக்கை அவசியம் தேவை. நாம் செய்ய போகும் தொழிலை சிறப்பாக நடத்துவதற்கு பணம் தேவை. அந்த பணத்தை வைத்து தான் தொழில் தொடங்க முடியும். அந்த பணத்தை எப்படி புரட்டுவது? என்று யோசித்து, யோசித்தே சிலர் தாங்கள் தொழில் தொடங்க நினைக்கும் எண்ணத்தை விட்டு விடுவார்கள். உங்கள் எண்ணங்களை வளமாக்க தான் அரசும், பல்வேறு வங்கிகளும் தொழில் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த கடன் உதவிகளை பெறுவதற்கு நாம் தயாராக வேண்டும்.
உறுதியான நம்பிக்கை
தொழில் தொடங்குவதற்காக வங்கி மேலாளரை அணுகி நாம் செய்ய போகும் தொழிலை எடுத்து கூறி கடன் கேட்கிறோம். கடன் கொடுக்கும் வங்கி மேலாளர், முதலில் நம்மை சோதிப்பது நம்பிக்கை தான். தொழிலில் வெற்றி கிடைக்காவிட்டால் கடனை எப்படி கட்டுவீர்கள் என்று. ஆனால் நம் நிச்சயம் இந்த தொழிலில் சாதித்து காட்டுவேன் என்று உறுதி கூற வேண்டும். நீங்கள் அப்படி கூறினாலும், உங்களை மாதிரி எனக்கு தெரிந்த நபர் ஒருவர் தொழில் செய்தார். அதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அவர் வேறு ஒரு தொழில் செய்து நஷ்டத்தை ஈடுகட்டினார். அது போல் உங்களுக்கு வேறு தொழில் செய்கிற திட்டம் இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
இதற்கும் நீங்கள், தாங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழிலின் செயல்பாடுகளை விளக்கி கூறுங்கள். அதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் கடன் தொகையை மாதந்தோறும் தவணை மாறாமல் கட்டி விடுவேன் என்று உறுதி கூறுங்கள்.
உங்கள் உறுதி தான் கடன் தரும் வங்கி மேலாளருக்கு அசாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்தும். அவர் சொல்கிறபடி நான் மேற்கொள்ளும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் வேறு தொழில் செய்து கடன் தொகையை அடைத்து விடுவேன் என்று கூறுவது நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைத்து விடும். எனவே நீங்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் மீது அசாத்தியமான நம்பிக்கையை முதலில் வையுங்கள். அது வங்கி மேலாளரை ஈர்த்து விடும்.
திட்ட மதிப்பீடு
நீங்கள் செய்யப் போகிற தொழில் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான திட்டத்தை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.
இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் உற்சாகத்துடன் பேசலாம். அடமானமில்லாத கடன்
அதாவது ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.
அடமான கடன் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும். ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.
முதலீடு தொகை எவ்வளவு?
தொழில் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்த தொகையில் குறைந்தபட்சம் 1:4.5 என்ற விகிதத்தில் நம்மிடம் சொந்த பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் ரூ.4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் தொழில் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். எனவே உங்கள் தொழிலில் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.
வங்கிகளை எப்படி அணுகுவது?
ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.
உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை (எஸ்.எம்.இ. கிளை) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
தேவையான ஆவணங்கள் அடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், தொழில் நடைபெறும் இடத்துக்கான முகவரிச்சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), தொழில் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!
No comments:
Post a Comment