கல்லூரி படிப்பை முடித்தவர்கள் அனைவரும் அடுத்த கட்டமாக ஏதேனும் ஒரு வேலையை நாடி செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே பணி நியமனம் கிடைக்கிறது. அதற்கு காரணம் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என முன்னதே அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு தங்களது பட்டபடிப்பை தேர்வு செய்து படிக்க வேண்டும். நல்ல வேலையை பெற்று தருவதற்கு பல்வேறு படிப்புகள் உள்ளது. பள்ளி படிப்பை முடித்தவர்கள் அனைவரும் அதற்கு மேல் என்ன படிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவில் உதவி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில் மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெறுவதுதான் அடிப்படையாக கருதப்படுகிறது. ஏனெனில் அது தான் அனைத்து பணிகளுக்கும் முதன்மையாக கருதப்படுகிறது. அடுத்த கட்டமாக உயர்கல்வி பக்கம் செல்வோம். பள்ளிகல்வியை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் உயர்கல்வியில் என்னென்ன துறைகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு தான் நம்மை அடுத்த படிக்கு கொண்டு செல்லும். நம்முடைய எதிர்காலத்தை தேர்வு செய்யும் தருணம்தான் இந்த உயர்கல்வி படிப்பு. அந்த வகையில் அதிக வேலை வாய்ப்பை தரும் கல்வி தகுதிகளாக தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, கலை அறிவியல் கல்வி, சிறுதொழில் கல்வி எனப் பல வகையான கல்வி முறைகள் உள்ளன. எனவே அவற்றை பற்றி தெளிவான தொகுப்பை காண்போம்.
தொழிற்கல்வி(Vocational Education):
முதலில் தொழிற்கல்வி படிப்பை பற்றி அறிவோம். தொழிற்கல்வி படிப்பு என்பதில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் ஆகியவை தான் தொழிற்கல்வி. இதில் சேர்வதற்கு மேல்நிலை படிப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். உயர்மதிப்பெண் பெற்றவர்கள் தங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ற பாடப் பிரிவுக்கு விண்ணபிக்க முடியும். மருத்துவம் போன்ற படிப்பில் நுழைவு தேர்வுகள் உள்ளன.
அதிக மதிப்பெண் உள்ளவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவரும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து அதற்கு உரிய காலத்தில் படித்து முடிப்பார்கள். மேலும் கல்லூரிகளில் எவ்வாறு தங்களுது திறன்களை வளர்த்து கொள்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. அதுவே நாம் எந்த இடத்தில் வேலை செய்ய போகிறோம் என்பதை முடிவு செய்யும். தங்களின் தகுதிக்கு ஏற்ப உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்யும் வாய்ப்புகள் உண்டு.
தற்பொழுது தொழிற்கல்வி படிப்பில் பல முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது மாணவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்துறை, நுண்ணியல் தொழில்நுட்பத் துறை தொடர்பான தொழிற் படிப்புகள் கற்பிக்கப்பட்டுகிறது. வேதியியல், விலங்கியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் முதல் வேளாண்மை, சுற்றுச்சூழல், மருத்துவம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் சிறந்த வேலைவாய்ப்பு துறையாக இது செயல்பட்டு வருகிறது.
தொழில்நுட்பக் கல்வி(Technical Education):
பள்ளி படிப்பான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேரலாம். தங்களின் உயர் மதிப்பெண்களுக்கு ஏற்ப தாங்கள் விரும்பிய துறையை தேர்வு செய்து தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கலாம். இதில் பொறியியல் துறையில் உள்ளது போல பல்வேறு துறைகள் இந்த தொழில்நுட்பக் கல்விலும் உள்ளது. இதில் சேர்ந்து படிப்பவர்களுக்கு நிச்சயம் அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பள்ளியில் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றவர்களை போல ஒரே வழியில் போகாமல் வேறுபட்ட முறையில் இடைநிலையாசிரியர் கல்விப் பயிற்சி இரண்டாண்டுகள் படித்து தேர்ச்சி பெற்றால் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து கொள்ளலாம். செவிலியர் பயிற்சி, கூட்டுறவுப் பயிற்சி போன்றவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று வேலை வாய்ப்புகளைப் பெறலாம். தொழில்நுட்பக் கல்வி படிப்பில் கூட நிறைய வேலை வாய்ப்பு உள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்வி(Arts and Science Education):
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பில் சேரலாம். களை மற்றும் அறிவியல் கல்வியில் ஏராளமான துறைகள் உள்ளன. அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, கணக்குப் பதிவியல், கணிப்பொறியியல், வணிகவியல் போன்ற பிரிவுகள் உள்ளன. இதில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் அதன்பின்னர் முதுகலைப் பட்டமும் பெறலாம். மேலும் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து இளம் கல்வியியல் பட்டமும் பெற்று கொள்ளலாம்.
இந்த பட்டப் படிப்புகளை படிப்பதன் மூலம் பல்வேறு அரசு துறைகளில் வேலை வாய்ப்புகள் பெறலாம். அவை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம், நடுவண் அரசுத் தேர்வாணையம், வங்கித் துறை, ஆயுள் காப்பீட்டுத் துறை, தொடர் வண்டித்துறை போன்ற துறைகள் உள்ளன. இவற்றில் பணி புரிய வேண்டும் என்றால் முதலில் அந்த துறையில் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் வேலை வாய்ப்பை பெற முடியும்.
இவற்றை பற்றிய தகவல்கள் நாளேடு, வானொலி, தொலைக்காட்சி, முதலிய ஊடகங்களின் மூலம் அறிய முடியும். இதனை பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு தங்கள் தகுதிக்கு ஏற்ப விண்ணபிக்கலாம். மேலும் மாவட்ட வேலை வாய்ப்பகத்தின் மூலமும் வேலை வாய்ப்பை பெற முடியும்.
சிறுதொழில் கல்வி(Small Business Education):
படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவரும் இதில் சேர்ந்து படித்து பயன் பெறலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர், தேர்ச்சி அடையாதவர் என அனைவரும் தொழிற்பயிற்சி கல்வியில் சேர்ந்து பயன் பெற முடியும். தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு அல்லது ஈராண்டு பயிற்சிப் பெற்றால் பணியில் சேர முடியும்.
இத்தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பல்வேறு துறைகள் உள்ளன. அவை கம்மியர், கடைசல் பிடிப்பவர் கட்டட வரைவாளர், நில அளவையாளர், தச்சர், படிப்புகளும், இயந்திரம், வாகனம், தொலைக்காட்சி குளிரூட்டும் கருவி, கைபேசி, கணினி முதலியவற்றைப் பழுதுபார்க்கும் படிப்புகளும் உள்ளன. நமது விருப்பத்திற்கேற்ப தேவையான துறைகளில் சேர்ந்து படித்து வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.
இராணுவம், காவல்துறைப் பணி(Military, Police Work):
இராணுவம், காவல்துறைப் பணி என்பது மக்களுக்காக சேவை செய்யும் ஒரு துறையாகும். இதற்கு தேவையான தகுதியாக கருதப்படுவது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் இராணுவம், காவல்துறையில் பணி புரிய முடியும். இவற்றிற்கு தேர்ந்தெடுக்கும் முறை என்பது முதலில் உடற்கூறு தேர்வாகும். அதன் பின்னர் எழுத்து தேர்வு நடைப்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களே பணியில் சேர முடியும்.
ஓட்டுநர், நடத்துனர் முதலிய பணிகளுக்கு உடற்கூறு தகுதியுடையவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். மேலும் மக்கள் நலப் பணியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற பணிகளிலும் சேர முடியும். இப்பணி குறித்த தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். அதன்பின், ஊடகங்களில் வெளியிடப்படும்.
அரசு பணியில்தான் சேர வேண்டும் என்று எண்ணாமல், ஒவ்வொருவரும் சுயதொழில் தொடங்க வேண்டும். இவற்றின் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும், அப்பொழுது தான் வேலை இல்லா திண்டாட்டம் குறையும். சுயதொழில் தொடங்குவதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும். அவற்றிக்கான பயற்சி, கடனுதவி போன்றவற்றை அரசே வழங்குகிறது.
வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். எவற்றையும் ஒரு தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டால் நிச்சயம் ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும். வேலையை பெறும் போது அது நாட்டிற்கும் வீட்டின் முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவும்.
Click here for latest employment news
No comments:
Post a Comment