மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற உரிமை உண்டு எனத் தெரிவித்துள்ளது. அந்தப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள் குறுக்கீடு செய்தால் தாராளமாக மாவட்ட குறைதீர் அலுவலரிடம் முறையிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும்.
18வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெறவும் திறன்சாரா வேலை பெறவும் உரிமை உண்டு. கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நலிவுற்ற பிரிவினருக்கான தனிநபர் பணிகளை அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
இத்திட்ட தொழிலாளர்களின் வேலைக்கான தேவை, வருகைப்பதிவேடு, ஊதிய பட்டியல் உருவாக்கம், நிதி விடுவிக்கும் ஆணை போன்றவை அனைத்தும் இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் தொழிலாளர்கள் வேலை செய்து முடித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்ட செயல்பாட்டினை ஆய்வு செய்யும் பொருட்டு ஊராட்சி அளவிலான பிரதிநிதிகளை கொண்டு சமூக தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில் சுட்டிகாட்டப்படும் குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு குறைகள் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன. எனவே, மேற்கண்டவாறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment