தினமும் 10 நிமிடங்கள் குளித்தால்... - Agri Info

Adding Green to your Life

March 10, 2023

தினமும் 10 நிமிடங்கள் குளித்தால்...

 தினமும் குளிப்பது நல்ல பழக்கம். அது சருமத்திற்கும் நன்மை பயக்கும். ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பல முறை குளிப்பார்கள். அப்படி உடல் சுத்தத்தை பராமரிப்பது ஆரோக்கியமான பழக்கம் என்றாலும் அது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் உடலில் சென்சிட்டிவ் எனப்படும் அதிக உணர் திறன் கொண்ட பகுதிகளில் சருமமும் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறையோ, அடிக்கடியோ குளித்தால் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வாரத்திற்கு 7 முறைக்கு மேல் குளிப்பதும் ஒவ்வொரு முறையும் சோப் அல்லது கிளென்சர் பயன்படுத்துவதும் சருமத்தில் படர்ந்திருக்கும் இயற்கை எண்ணெய் தன்மையை அகற்றி பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்தும். சரும தொற்றுக்கும் வழிவகுத்துவிடும்.


எத்தனை முறை குளிக்கலாம்? 
வாரத்திற்கு 10 முறை குளிப்பது தவறில்லை. ஆனால் ஏற்கனவே சரும பிரச்சினை கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு 5 முறைக்கு மேல் குளிப்பது தீங்கு விளைவிக்கும் என்பது சரும நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. சருமத்தின் தன்மையை பரிசோதித்துவிட்டு மருத்துவரிடம் எத்தனை தடவை குளிப்பது பொருத்தமானது என்று ஆலோசனை கேட்கலாம். அதிகமாக குளித்தால் சருமத்திற்கு என்ன பாதிப்பு நேரும்? பாக்டீரியா, கிருமிகள் மற்றும் வறட்சி போன்றவை தாக்காமல் இருக்க சருமத்தில் இயற்கையாகவே பாதுகாப்பு அடுக்கு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு நாளைக்கு ஒருமுறை குளிப்பது சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். இறந்த செல்களை நீக்குவதற்கு வித்திடும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடியோ, பலமுறையோ குளிப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.

அப்படி குளிக்கும்போது ஒவ்வொரு முறையும் சோப் அல்லது ஷாம்பு பயன்படுத்தினால் ஆபத்து இரண்டு மடங்காக அதிகரிக்கும். அதாவது சருமம் வறட்சி அடைவது, சரும எரிச்சல், சரும தொற்று போன்ற பாதிப்புகள் உண்டாகும். அதிக நேரம் குளிப்பதன் காரணமாக ஒவ்வாமை, நோய்த்தொற்று கூட ஏற்படலாம். அடிக்கடி குளிக்கும் செயல்முறையின்போது உடலை அதிகமாக சுத்தம் செய்தால், சருமத்தை பாதுகாப்பதற்காக ஆன்டிபாடிகளாக செயல்படும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் உடலில் இருந்து நீங்கிவிடும். மேலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகளை அதிகம் பயன்படுத் துவது, சரும நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். நல்ல நுண்ணுயிரிகளை உடலில் இருந்து அகற்றிவிடும்.

குளிக்கும் நேரத்தை குறையுங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால், குளிக்கும் நேரத்தை குறையுங்கள். உதாரணமாக, தினமும் 10 நிமிடங்கள் குளித்தால், அதை 5 நிமிடங்களாக குறையுங்கள். எவ்வளவு குறைவாக சருமத்தில் தண்ணீர் படிகிறதோ அவ்வளவு குறைவாக சரும பிரச்சினைகள் ஏற்படும். சூடான நீரை தவிருங்கள்: அதிகமாக குளித்தால், சுடுநீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுடுநீர் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றி, சருமத்தை வறண்டு போகச் செய்து விடும். வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். அதிலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீர் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சரும வறட்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். சரும துளைகள் திறப்பதை தடுக்கும். கூடுமானவரை15 நிமிடங் களுக்கு மேல் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

மென்மையான குளியல் சோப்பைப் பயன் படுத்துங்கள்: குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப் உள்ளிட்டவை ரசாயன கலப்பு அதிகம் அல்லாமல் இயற்கை தயாரிப்புகளாக இருப்பது நல்லது. இரண்டாவது முறை குளிக்க விரும்பினால் சோப்பை தவிர்த்துவிட்டு தண்ணீரில் அப்படியே குளிப்பதுதான் நல்லது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க மென்மையான அல்லது பால் கலந்த ஈரப்பதமூட்டும் சோப்பை பயன்படுத்தலாம். இது அதிகப்படியான குளியலால் ஏற்படக்கூடிய தோல் பிரச்சினைகளை குறைக்கும். உடலை உலர வையுங்கள்: குளித்து முடித்ததும் உடலை உலர்வடைய செய்வதற்கு டவலை கொண்டு அழுத்தமாக தேய்க்கக்கூடாது. அது சருமத்தில் உராய்வை, எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடலில் இருக்கும் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடும். டவலை கொண்டு மென்மையாக துடைப்பதுதான் சரியானது. உடலில் படிந்திருக்கும் அதிகப்படியான நீரை அகற்றும் விதத்தில்தான் துடைக்க வேண்டும். குளித்து முடித்ததும் 'பாத் ரோப்' எனப்படும் மென்மையான உடையை அணிவது நல்லது. சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் இருக்க வேண்டுமெனில், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது அவசியமானது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment