திருமணமான பெண்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறார், பெங்களூருவை சேர்ந்த நேஹா பகாரியா. அதற்காக பிரத்யேக இணையதளத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதன் மூலம் வேலைவாய்ப்புடன், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இந்த இணையதளம் முழுக்க, முழுக்க பெண்களுக்கானது.
கடந்த 7 ஆண்டுகளாக இலவச சேவையை மேற்கொண்டு வரும் நேஹாவிடம் பேசினோம். ''நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு திருமணமாகி, இரு மகன்கள் இருக்கிறார்கள். நான் பென்சில்வேனியா நாட்டில் பார்மசுட்டிகல் படித்ததோடு, மனிதவள மேம்பாட்டு துறையிலும் பட்டம் பெற்றேன். பின்பு மருத்துவ துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றினேன்.
திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தியதால் அலுவலக வேலையில் இருந்து விலகி இருந்தேன். என்னுடைய மகன்கள் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தவுடன், எனக்கான ஓய்வு நேரம் அதிகரித்தது. அதனால் மீண்டும் பணியாற்ற ஆரம்பித்தேன். ஆனால் பழைய வேகமும், புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடுகொடுக்கும் தன்மையும் குறைந்திருந்தது. அதனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப என்னை நானே புதுப்பிக்க (அப்டேட்) வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் என்னை போன்று சிறு இடைவேளைக்கு பின்பு பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதிப்படுத்த ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான் ஜாப்ஸ் பார் ஹெர்'' என்றவர், பிரத்யேக இணைய தளத்தின் செயல்பாடுகளை விளக்குகிறார். ''இந்த இணையதளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. குறிப்பாக திருமணம், இல்லற வாழ்க்கை, குழந்தைகள் என குடும்ப பந்தம் ஏற்படுத்திய இடைவேளைக்கு பின்பு வேலை தேடும் குடும்ப தலைவிகளுக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தக்கூடியது. மேலும் புதிதாக வேலைத்தேடும் கல்லூரி மாணவிகளுக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களும், தொழில்துறை நிறுவனங்களும் இந்த இணையதளத்தோடு இணைந்து செயல்படுவதால், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. கடந்த வருட கணக்கின்படி, 50 ஆயிரம் பெண்கள் 'ஜாப்ஸ் பார் ஹெர்' இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
7 ஆயிரத்து 500-க்கும் அதிகமான நிறுவனங்கள் எங்கள் இணையதளத்தோடு கைகோர்த்திருப்பதால், பெண்கள் விரும்பும் வேலையை, அவர்கள் விரும்பும் பகுதிகளிலேயே பெற முடிகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு பெண்கள் அதிகமாக பயன்பெறுகிறார்கள்'' என்றதோடு, இணையதளம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சிகளையும் இலவசமாக வழங்குகிறார். அதை அவரே விவரிக்கிறார்.
'வழக்கமான வேலை தேடல் இணையதளங்களை போன்றே, எங்கள் இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்கி, தங்களை பதிவு செய்து கொண்டால் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் பகிரப்படும். மேலும் சுயவிவர பட்டியல் (ரெஸ்யூம்) உருவாக்குவதில் தொடங்கி, பணிக்கான அழைப்பாணை பெற்றுத் தருவது வரை அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்.
எல்லா பெண்களும், எல்லா துறைகளிலும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில பெண்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். ஆனால் அவர்களது ஆங்கில எழுத்து நடையில் நிறைய தவறுகள் இருக்கும்.
சில பெண்களுக்கு ஆங்கிலம் நன்றாக எழுத வரும், ஆனால் அவர்களால் திறம்பட பேச முடியாது. இதில் இரண்டிலும் சிறப்பானவர்களுக்கு, தேர்வாளர்களின் கேள்விகளுக்கு தைரியமாக பதில் சொல்ல முடியாது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிக்கல்கள் இருக்கின்றன. அதை தீர்த்து வைப்பதும் எங்களுடைய வேலை தான்.
வேலைதேடி வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதுடன், நேர்காணலில் சொதப்புபவர்களுக்கு தகுந்த பயிற்சியும் வழங்குகிறோம். 2015-ம் ஆண்டின் பெண்கள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதள சேவையில் வேலைவாய்ப்புடன், அது சம்பந்தமான எழுத்துத்திறன் பயிற்சி, பேச்சுத்திறன் பயிற்சி, மென்பொருள் பயிற்சி என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்குகிறேன்'' என்றவர், 'இணையதள சேவையில், வேலைவாய்ப்பு பயிற்சிகள் எப்படி வழங்கப்படுகின்றன' என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.
''ஆன்லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இருமுறைகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறோம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் இணையதள பக்கத்திலேயே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த வகுப்பில் பங்கேற்று, திறமைகளை வளர்த்து கொள்ள முடியும். அதேசமயம் இணையதள இணைப்பில் இருக்கும் துறை சார்ந்த வல்லுனர்களின் அறிவுரைகளையும் தனிப்பட்ட முறையில் கேட்கலாம். இது ஒரு ரகம் என்றால், ஆப்-லைன் வகுப்புகள் அடுத்த ரகம்.
இந்த வகுப்புகள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டும் பயன்பெறலாம். குடும்ப தேவைகளுக்காக சில பெண்கள் வேலை தேடுகிறார்கள். சிலர் சமூக அடையாளத்திற்காக பணியாற்றுகிறார்கள். சிலர் மன நிறைவிற்காக பணியாற்றுகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு பெண்களுக்கும் ஒருவிதமான தேவையிருப்பதால் குடும்ப தலைவிகளின் அலுவலக பணி, மன நிறைவான பணியாகவே அமைகிறது.
* திருமணமான பெண்கள், அலுவலக வாழ்க்கையை விரும்புகிறார்களா?, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்குமா?
பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் இப்போது அதிகரித்திருக்கிறது. மனிதவள மேம்பாட்டு அதிகாரி, மென்பொருள் பொறியாளர், டீம் லீடர்... போன்ற முக்கிய பணிகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அதனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து ஓரளவிற்கு செட்டில் ஆகியதும், மீண்டும் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை தேடுகிறார்கள். குறிப்பாக பிள்ளைகளுக்கு பள்ளிகளை தேடும்போதே, தங்களுக்கான புது அலுவலகத்தையும் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். மனைவியாக, தாயாக... 6 அல்லது 8 வருடங்கள் பணியாற்றிவிட்டு, அந்த பணியோடு புதிதாக கிடைத்திருக்கும் அலுவலக பணியையும் தொடருகிறார்கள்.
No comments:
Post a Comment