உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உண்ணும் உணவில் இருந்துதான் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன.
சில மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால் பசி ஏற்படுவது இயல்பானது. ஆனால் சாப்பிட்ட பிறகும் பசி உணர்வு இருந்துகொண்டிருந்தால் உடல் நலனில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்.
அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இருப்பினும் எப்போதுமே பசியுடன் இருப்பதாக உணர்ந்தால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மன அழுத்தம்: அதிகப்படியான பசி உணர்வுக்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பதற்றமாக இருக்கும்போது கார்டிசோல் எனும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அது பசி உணர்வை தூண்டிவிடும்.
உடற்பயிற்சி: அதிகமான நேரம் உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் அடிக்கடி உணவு உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நிச்சயமாக உணர்வீர்கள். உடற்பயிற்சிக்கு ஏற்ப போதுமான உணவை குறிப்பிட்ட இடைவெளிக்குள் சாப்பிடவில்லை என்றால் பசி எட்டிப்பார்க்கும். உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்கு உண்ணும் உணவும் முக்கியமானது.
வேகமாக சாப்பிடுவது: வேகமாக சாப்பிடுவது சட்டென்று பசியை போக்கிவிடும். வயிறும் நிரம்பிவிடும். ஆனால் சில நிமிடங்கள் கழித்து பசி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உணவை மென்று மெதுவாக சாப்பிடுவதுதான் பசி உணர்வை கட்டுப்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவு: உணவில் உள்ள சர்க்கரையை குளுக்கோஸாக மாற்றும் திறன் உடல் அமைப்புக்கு இருக்கிறது. ஆனால் நீரிழிவு நோய் இருந்தால் குளுக்கோஸ் எளிதில் உடலில் உள்ள செல்களை சென்றடையாது.
சாப்பிடுவதை விட அதிக அளவில் சிறுநீர் கழிக்க நேரிடும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அதிக அளவு சாப்பிடுவார்கள். அவர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு எழுந்து கொண்டிருக்கும். அத்துடன் கவலை, பதற்றம், உடல் பருமன் போன்ற அறிகுறிகளும் பசி உணர்வை தூண்டிக்கொண்டிருக்கும்.
இது நீரிழிவு, தைராய்டு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் அடிக்கடி பசி உணர்வு எழுந்தால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
No comments:
Post a Comment