புதிதாக வீடு கட்டுபவர்கள் கவனிக்க.. - Agri Info

Adding Green to your Life

March 26, 2023

புதிதாக வீடு கட்டுபவர்கள் கவனிக்க..

 வீட்டின் முக்கிய பகுதி தரை. மணல் தரையானது சிமெண்ட் தரையாக மாறி, மொசைக் என்பது நாகரிகத்தின் வளர்ச்சியாக கருதப்பட்ட காலம் எல்லாம் மலையேறி தற்போது மார்பில் கிரானைட் என்பதே அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் விலை மிக அதிகம் என்பதால் மார்பிள் கிரானைட் போன்று தோற்றத்தை தரவல்ல வெட்ரிஃபைடு டைல்ஸ் என சொல்லப்படும் செயற்கை டைல்ஸ்கள் அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. 

தற்போதைய புதிய செய்தி என்னவென்றால் இத்தகைய வெட்ரிஃபைடு டைல்ஸ்கள் இரண்டுக்கு இரண்டு அடி அளவு உடையதாக விற்பனைக்கு வந்தன. தற்போது இவை இரண்டுக்கு நான்கு அடி, இரண்டுக்கு ஆறு அடி என பெரிய அளவிற்கு வருவதால் வீட்டில் கூடங்களில் புழங்கும் அறைகளில் தரையில் இத்தகைய டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது. இவை அதிக இணைப்புகள் இல்லாமல் இருப்பதால் தரை பார்ப்பதற்கு அழகாகவும் சிறப்பான தோற்றம் உடையதாகவும் இருக்கும். மேலும் இவைகளை பதிக்கும் பொழுதும் மேடு பள்ளம் இல்லாமல் சமநிலையோடு பிற்காலத்தில் ஒரு டைல்ஸ் ஏறி ஒரு டைல்ஸ் இறங்கி என்பது மாதிரியான பிரச்சனைகள் தவிர்க்கும் படியாக அருமையாக பதிக்கப்படுகிறது.


எம் சாண்ட் (கருங்கல் ஜல்லி மணல்) தன்மை குறித்து இன்னமும் கூட மக்கள் இது எந்த அளவுக்கு திறமான கட்டுமானத்தை தரும் என யோசிக்கின்றனர். அவ்வாறு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் 90 சதவீத கட்டிடங்கள் எம் சாண்ட் கொண்டு கட்டப்படுபவை தான். 10 சதவீதம் கூட ஆற்று மணல் அருகே கிடைக்கக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே. 

எம் சாண்ட் வாங்கும் பொழுது பார்த்து அவற்றின் தரத்தை பொறியாளருடன் கலந்தாலோசித்து வாங்குவது நலம். ஒரு வீட்டின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது மின்சார செலவு. இதை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் புது வீடு கட்டும்பொழுது மின்சாரம் சிக்கனமாக இருக்கும் படியாக எல்இடி பல்புகளை உபயோகப்படுத்துவது நன்மை தரும். 

தற்போது பல வகையான மாடல்களில் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணம் எல்இடி பல்புகள் கிடைக்கின்றன இவற்றின் விலை சற்றே கூடுதலாக இருப்பினும் இவற்றின் நீண்ட கால பயன்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மின்சார சிக்கனத்திற்கு பெரிதும் உதவுவதால் மாதாந்திர செலவுகளில் மிச்சம் பிடிக்கலாம்.

புது வீட்டிற்க்காக வாங்கக்கூடிய மின்சார ஒயர்களில் நீங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது தரமான ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற எலக்ட்ரிக்கல் ஒயர்களை அந்தந்த தேவைக்கு ஏற்ற படி தகுதி வாய்ந்த மின்சார பொறியாளரின் ஆலோசனைப்படி தீ விபத்தின் போது பாதுகாப்பை தரவல்ல 'பயர் ப்ரூப்' ஒயர்களாக வாங்க வேண்டும். 

இது பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் எழாமல் தடுக்கும். தளத்திற்கு மேல் முன்பெல்லாம் செங்கல் ஜல்லியுடன் கடுக்காய் வெல்லம் போன்றவற்றை சேர்த்து மரக்கட்டைகளால் அடித்து அதன் மேல் சதுரவோடு பதிப்பார்கள். இது சூரிய வெப்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும். மொட்டை மாடிக்கு கீழே அமைந்துள்ள வீட்டில் அதிக அளவு வெப்பத்தை தராமல் தடுக்கும். இப்போது இதற்கு மாறாக கூலிங் டைல்ஸ் எனப்படும் டைல்கள் பதிக்கப்படுகின்றன.

 இவை சூரிய வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் 30 சதவீத வெப்பத்தை பிரதிபலித்து விடுகிறது. இதனால் வீட்டிற்குள் வெப்பம் அதிக அளவு இறங்காது. இத்தகைய டைல்ஸ்களில் தரமானவற்றை பார்த்து வாங்கி நீங்கள் உங்கள் வீடுகளில் பதிக்கலாம்

No comments:

Post a Comment