உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும், தசைகளை வலுப்படுத்தவும் இப்போதெல்லாம் சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை உட்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் தடகள வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் இதுபோன்ற பழக்கங்களை கடைப்பிடிக்கின்றனர். உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் உணவு மூலமாக கிடைப்பதில்லை என்ற மனக்குறையின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சத்து மாத்திரைகளால் நம் உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதை எடுத்துக் கொள்ளும் முன்பாக பின்வரும் விஷயங்களை நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் : என்னுடைய நண்பன் எடுத்துக் கொள்கிறான், விளம்பரத்தில் சொல்கிறார்கள் என்ற காரணங்களுக்காக சத்து மாத்திரை எடுத்துக் கொள்வது தவறு. உங்கள் உடலில் எது பற்றாக்குறையாக இருக்கிறது, எவ்வளவு தேவை உள்ளது என்பதை பரிசீலனை செய்து, அதற்கு தகுந்தவாறு எடுத்துக் கொள்ள வேண்டும். மிகுதியாக எடுத்துக் கொண்டால் உடல்நல கோளாறுகள் உண்டாகக் கூடும்.
தரம் மற்றும் அளவு : அனைத்து சத்து மாத்திரைகளிலும் மூல பொருள் ஒரே மாதிரியாக சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொன்றிலும் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து வெவ்வேறாக இருக்கிறது. ஆக தரமான மருந்து நிறுவனத்தை தேர்வு செய்து வாங்குவது முக்கியம். அதிலும் உங்கள் உடலுக்கு எவ்வளவு டோஸ் எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும்.
இயற்கையானது என்பதை நம்ப வேண்டாம் : ஊக்க மருந்துகள் மற்றும் சத்துணவுகள் மீது இயற்கையானது என்று அச்சிடப்பட்ட லேபிள்களை பார்த்து ஏமாற வேண்டாம். அதே சமயம், ஊக்க மருந்துகள் இயற்கையானதாகவே இருந்தாலும் கூட, அதன் மூலமாக எதிர்மறை விளைவுகள் உண்டாகக் கூடும். ஊக்கமருந்துகளை வாங்கும்போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை கவனமாக படித்துப் பார்த்து வாங்கவும்.
ஆரோக்கியமான உணவுக்கு ஈடானது அல்ல : உங்கள் உடலுக்கு அனைத்து விதமான சத்துக்களும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வெவ்வேறு வகையான கீரைகள், வண்ணமயமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சுழற்சி அடிப்படையில் சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருபோதும் மருந்துகள் இதற்கு மாற்றாக அமையாது. சத்துமாத்திரைகள், ஊக்க மருந்துகளை எடுத்துக் கொண்டால் சத்தான உணவு தேவையில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது.
எல்லோருக்கும் உகந்தது அல்ல : நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல நண்பர்களை பார்த்து ஊக்க மருந்துகளை உபயோகிக்க தொடங்க வேண்டாம். உங்களின் மரபணு, வாழ்வியல், உணவுப் பழக்கம் போன்றவற்றை பார்க்கும்போது உங்களுக்கான தேவைகள் வேறு மாதிரியாக இருக்கலாம். சத்து மாத்திரைகள் மற்றும் ஊக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன்பாக ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.
No comments:
Post a Comment