வீட்டுக்கடன் வாங்க எந்த வட்டிவிகிதம் சிறந்தது - Agri Info

Adding Green to your Life

March 3, 2023

வீட்டுக்கடன் வாங்க எந்த வட்டிவிகிதம் சிறந்தது

 ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் பல ஆண்டுகள் வீட்டுக் கடன்களைக் கட்டும் போது நிலையான வட்டி விகிதத்தால் அதிக வட்டியுடன் நாம் பணம் கட்ட நேரிடும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 

இன்றைக்கு வீடு கட்ட வேண்டும் என்று யோசித்தால் எந்த இடத்தில் என்று பெரும்பாலும் யோசிப்பதை விட நமக்கு எந்த வங்கியில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் குறைந்த வட்டியுடன் கடன் கிடைக்கும் என்று தான் நினைப்போம். சிறிய வீடாக இருந்தாலும், அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் வங்கிகளில் வீட்டுக்கடன்களைப் பெற்றுத் தான் வேலையை ஆரம்பிக்கிறார்கள். 

இவர்களுக்காகவே நிலையான வட்டி விகிதம் மற்றும் மாறுபட்ட விகிதம் என்ற இரு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் புதிதாகக் கடன் வாங்குபவராக இருந்தால் நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது, எதிர்காலத்தில் வட்டி விகிதங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். கார் அல்லது தனிநபர் கடன்களைப் பெறுவதற்கு நிலையான விகிதத்தில் கடன் வாங்குவது நல்லது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். எது சிறந்தது? நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ கடன்களை வாங்கினால் போதும் என்று நினைப்போம். ஆனால் எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைக் குறித்து யோசிக்க மாட்டோம். எனவே முதலில் நீங்கள் வட்டி விகிதம் என்ன? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

 ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் போது, மாறும் வட்டி விகித கடனில் கடன் வாங்கியவர்களுக்கு தவணைக்காலம் (இ.எம்.ஐ.) குறையக்கூடும். ஆனால் நிலையான வட்டி விகிதங்களில் இந்த வசதிகள் இருக்காது. ஒருவேளை சில வங்கிகள் உங்களுக்கு ஆரம்பத்திலேயே வட்டி விகிதங்களைக் குறைத்து கடன் வழங்கும் பட்சத்தில், எவ்வித தயக்கமும் இன்றி நிலையான வட்டிக்கடனை வாங்கலாம். இல்லையென்றால் சற்று யோசித்து வாங்குவது நல்லது.

 கடன் வழங்குபவர்கள் நிலையான வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்கக்கூடும். ஆனால் நிலையான விகிதக் கடன் வாங்கும் போது நம்மிடம் முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிப்பார்கள். ஆனால் மாறும் வட்டி விகித கடனில் இந்த நடைமுறை இல்லை. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கியவர்களாக இருந்தால், கூடுதல் கட்டணங்கள் ஏதுவுமின்றி குறைந்த வட்டியுடன் உங்களுக்குக் கிடைத்தால் மட்டுமே நிலையான வட்டி விகித கடனை மாற்றுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்களுடைய மாதாந்திர வருமானம், உங்களது பொருளாதார நிலை குறித்து யோசித்து எந்த வழியில் வீட்டுக்கடன் வாங்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.


No comments:

Post a Comment