காபியால் நமக்கு ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் அளவு சரியாக இருக்க வேண்டும். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்குக் கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும் மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காஃபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல அதிகப்படியான காபி என்றைக்குமே உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். காபி இல்லாமல் எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்றால், காபி எந்த அளவு அருந்த வேண்டும், எப்போது அருந்த வேண்டும், வெறும் வயிற்றில் காபி குடிப்பது நல்லதா போன்றவற்றை காபி பிரியர்கள் அறிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.
ஏனெனில் அது அவர்களின் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவும். தொடர்ந்து காபி குடிப்பவர்களுக்கு நடுத்தரவயது மரணம் ஏற்படும் அபாயம் குறைவு என, ஹார்வர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த், நிறுவனம் ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும், நீங்கள் சரியான முறையில் காபி குடிக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் காஃபிக்களில் செயற்கை காஃபின் சேர்க்கப்படுகிறது. இந்த காஃபின் மருந்து உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறையை பல வழிகளில் பாதிக்கிறது. காஃபின் உடலின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது இதனால் ஒருவரை ஆற்றலுடன் உணர வைக்கிறது. எனவே அதிகப்படியான காஃபின் உட்கொள்வது தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உங்கள் தினசரி மூன்று முறைக்கு மேல் காஃபி பருகாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
நீங்கள் காபி அருந்துபவராக இருப்பின், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் காபி குடிப்பதன் விளைவாக உங்கள் உடல் அதிக சிறுநீரை உற்பத்தி செய்யலாம், இது உடலில் நீர் சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் சோர்வு, தலைவலி மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைபாடு போன்ற பலவிதமான தீங்கு விளைவிக்கும். எனவே காபி குடிப்பவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம்.
பில்டர் காபி குடிப்பவர்கள் காபி கொட்டைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் பழைய காபி கொட்டையை தேர்ந்தெடுத்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தரமான காபி கொட்டைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
காபியுடன் சுவைக்காக கெட்டியான கிரீம், சூடான சாக்லேட் போன்றவற்றை சேர்த்து கொள்வது எடை அதிகரிப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ஆரோக்கிய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆதலால், இனி காபியில் கிரீம் சேர்த்து அருந்தாதீர்கள்.
உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும், இது கொழுப்பு கல்லீரல் நோயாக உருவாகலாம் மற்றும் நீரிழிவு நோய்க்கும் பங்களிக்கிறது. மேலும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. சூடான நீர், தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை அதிகமாகவோ அதிக சூடாகவோ குடிப்பதால், உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிக்கும். எனவே காபியை அளவாக பருகுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நீங்கள் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருக்கும் சூழல் ஏற்படும் போது காபி குடிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தூங்க செல்வதற்கு முன் காபி குடிப்பது என்பது நல்லதல்ல. ஏனெனில் தூக்கம் சரியாக இல்லாமல் அதன் காரணமாக ஒற்றைத் தலைவலி, உடற் சோர்வு, பதற்ற மனநிலை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
Click here for more Health Tip
0 Comments:
Post a Comment