கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது.... உடலை குளிர்ச்சியாக வைக்க தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், உடல் அதிக உஷ்ணமானால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.8°F முதல் 99.0°F இருத்தல் வேண்டும். உடல் உஷ்ணத்திற்கு காலநிலை மாற்றம், உணவு பொருட்கள் என பல காரணங்கள் உள்ளது. நமது உடல் சூட்டை கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். அந்தவகையில், உடல் உஷ்ணத்தை இயற்கையாக கட்டுப்படுத்தும் சில உணவுப்பொருட்கள் பற்றி காணலாம்.
உடல் சூட்டை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய உணவு பொருளாக இளநீர் உள்ளது. மேலும், கோடை காலத்தின் போது ஏற்படும் சருமம் தொடர்பான ஒவ்வாமை பிரச்சனைகளை எதிர்கொள்ள இளநீர் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. எனவே, கோடைக்காலத்தில் தினமும் குறைந்தபட்சம் ஒரு இளநீராவது குடிக்க வேண்டியது அவசியம்.
வெள்ளரிக்காய் ஒரு கோடை கால உணவு பொருள். வெள்ளரிக்காயினை அப்படியே சாப்பிடுவது (அல்லது) வட்ட வடிவில் வெட்டி கண் இமைகளுக்கு மேல் வைத்து ஓய்வு எடுப்பது, உடல் சூட்டை குறைக்க உதவும். அதுமட்டும் அல்ல, உடல் எடை குறைப்புக்கு வெள்ளரிக்காய் சிறந்த உணவாக உள்ளது.
புதினாவை சட்னி, சாறு, சாதம் என ஏதேனும் ஒரு வடிவில் தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். மேலும், புதினாவில் உள்ள மருத்து குணங்கள் வயிற்றுப்புண், குடல் புண்களையும் குணப்படுத்தும்.
தர்பூசணி பழம் சுமார் 91.45% தண்ணீரால் ஆனது. கோடைக்கு ஏற்ற இந்த பழத்தினை அவ்வப்போது சாப்பிடுவது உடல் சூட்டை கடுப்படுத்தி கோடை நோய்களில் இருந்து காக்கும். இது உடலை குளிச்சியாக்குவதுடன், சரும பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
தயிரை நேரடியாக எடுத்துக்கொள்ளும் போது அது உடல் சூட்டை அதிகரிக்கும். எனினும் லஸ்ஸி, ராய்த்தா மற்றும் மோர் என பல குளிர் பான வகையாக தயிரை எடுத்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும். அதுமட்டும் அல்ல, இது உடலுக்கு தேவையான புரதத்தை கொடுத்து புத்துணர்ச்சியளிக்கும்.
கோடை காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கும் ஒரு ஊட்டச்சத்து மிக்க பழமாக வாழைப்பழம் (குறிப்பாக பச்சை வாழைப்பழம்) உள்ளது. மேலும், இந்த வாழைப்பழம் உஷ்ணத்தால் ஏற்படும் மலச்சிக்கலையும் போக்குகிறது. வாழைப்பழத்தில்,வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது அல்சர் அபாயத்தை குறைக்கிறது.
அவகோடா என அழைக்கப்படும் பட்டர் ஃப்ரூட் -யில் மோனொசாட்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இது உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவுவதோடு, செரிமான பிரச்சனைகளை போக்கவும் பெரிதும் உதவுகிறது. மேலும், இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் குளிர்ச்சித்தன்மைக்கு பெரிதும் உதவுகிறது. எலுமிச்சையை ஏதேனும் ஒரு வடிவில் நம் உணவில் ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்வது உடல் சூட்டை குறைக்க உதவும்.
No comments:
Post a Comment