பார்க்கின்சன் நோய் என்பது நமது நரம்பு அமைப்பினை பாதிக்கக்கூடிய ஒரு உடல்நலக்கோளாறு ஆகும். இதன் காரணமாக இது நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும் உடல் உறுப்புகளை மெதுவாக சேதப்படுத்த ஆரம்பிக்கும். இதற்கான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் மிகக்குறைவாகவே காணப்படும். ஒரு கைகளில் மட்டும் நடுக்கத்தை ஒருவர் உணரலாம். நாளாக நாளாக உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் பின்னடைவு ஏற்படுகிறது. இந்த பதிவில் பார்க்கின்சன் நோயின் அறிகுறிகள், ஆபத்துக் காரணிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பார்க்கலாம்.
அறிகுறிகள்:
பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் மிகவும் மிதமாக இருப்பதால் அவற்றை கண்டறிய முடியாமல் போகலாம். உடலின் ஒரு புறத்தில் மட்டுமே தெரிய ஆரம்பிக்கும் இந்த அறிகுறிகள் காலப்போக்கில் இருபுறமும் உணரப்படுகிறது. பார்க்கின்சன் நோய்க்கான அறிகுறிகள் பின்வருமாறு..
*நடுக்கம்: எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் கூட கைகளில் நடுக்கம் ஏற்படும். ஏதேனும் வேலை செய்யும் போது இந்த நடுக்கம் குறையலாம். கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை தேய்க்க வேண்டும் போன்ற உணர்வு ஏற்படும்.
*உடல் இயக்கத்தில் தோய்வு: நீங்கள் சாதாரணமாக செய்து கொண்டிருந்த வேலை கூட இப்போது கடினமாக தோன்றலாம். நடப்பது, சேரில் இருந்து எழுந்திப்பது போன்ற சிறு சிறு விஷயங்கள் கூட உங்களுக்கு சிரமத்தை அளிக்கலாம்.
*இறுக்கமான தசைகள்: தசைகளில் ஒரு வித இறுக்க உணர்வு ஏற்படும். இது வலியை உண்டாக்கும்.
*தோரணை மற்றும் உடலை பேலன்ஸ் செய்வதில் சிக்கல்:
நேரான உடல் தோரணை மாறி கூன் விழுந்த தோரணை ஒருவருக்கு ஏற்படலாம். உடலை பேலன்ஸ் செய்ய முடியாமல் கீழே விழ நேரலாம்.
*தன்னியக்க செயல்பாடுகளை செய்ய முடியாமல் போதல்:
சிமிட்டுதல், சிரிப்பது மற்றும் நடக்கும் போது கைகளை வீசுவது போன்ற செயல்பாடுகளை செய்வதில் சிக்கல் எழலாம்.
*பேசுவதில் பிரச்சினை:
ஒருவர் வழக்கத்தை விட மெதுவாக பேச ஆரம்பிக்கலாம் அல்லது பேசுவதற்கு தயங்கலாம்.
*எழுதுவதில் சிக்கல்:
பேனா பிடித்து எழுவது சிரமமாக தோன்றும். மேலும் எழுத்துக்கள் முன்பை விட சிறியதாக இருக்கும்.
மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடை ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பின்வரும் சில விஷயங்கள் இந்த நோயுடன் தொடர்புடையதாக இருப்பது தெரிய வந்துள்ளது.
*மரபணுக்கள்: மரபணுவில் ஏற்படும் ஒரு சில மாற்றங்கள் பார்க்கின்சன் நோய்க்கு வழிவகுக்கலாம்.
*சுற்றுச்சூழல் தூண்டுதல்கள்: ஒரு சில நச்சுகள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ஆபத்துக் காரணிகள்:
பார்க்கின்சன் நோயுடன் தொடர்புடைய ஒரு சில ஆபத்துக் காரணிகள் பின்வருமாறு..
*வயது: இந்த நோய் பெரும்பாலும் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது. இள வயதில் பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.
*மரபுவழி: உங்கள் நெருங்கிய சொந்தத்திற்குள் இருக்கும் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் உங்களுக்கும் இது ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கான சாத்தியம் மிகக்குறைவு.
*பாலினம்: பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிக அளவில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
*நச்சுக்களிடம் வெளிப்படுவது: பூச்சி கொல்லிகள் போன்றவற்றின் வெளிப்பாடு பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
தடுப்புமுறை:
பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் அறியப்படாததால் இதற்கான தடுப்பு முறையும் ஒரு புதிராகவே உள்ளது. எனினும், காபி, டீ, கிரீன் டீ, கோலா போன்ற காபின் கலந்த பானங்களை குடிப்பது பார்க்கின்சன் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இதனை நிரூபிக்க எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
No comments:
Post a Comment