இன்றைய தலைமுறைகள் கைகளில் புத்தகத்தை எடுத்து படிக்கும் பழக்கமே இல்லாமல் வருகின்றனர். இவர்களுக்கு பாட புத்தகம் தாண்டி கதை, கவிதை, என்று எதையும் புத்தகத்தைத் தொட்டு, பக்கங்களை கையால் திருப்பி படிக்கும் ஆசை இல்லை. போன், டேப்லெட், கணினி என்று திரைகளை சார்ந்தே வளர்க்கிறார்கள்.
இவர்களுக்கு புத்தகங்களை அறிமுகம் செய்யவேண்டும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுவரவும் பல அமைப்புகளும் பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. ஒரு தனியார் கடை கூட வாங்கும் பொருளோடு புத்தகம் இலவசம் என்று அறிவித்துள்ளது.
இதே போல வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள அரகம் கிராமத்தை நாட்டின் மிகப்பெரிய புத்தக கிராமமாக மாற்ற புனேவைச் சேர்ந்த சர்ஹாத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஜம்மு காஷ்மீர் அரசுடன் இணைந்து இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான திட்ட வரையறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளது.
ஏன் அரகம் கிராமத்தை தேர்ந்தெடுத்துள்ளது என்பதற்கான காரணம் இன்னும் சுவாரசியமானது. புத்தகம் படிப்பது என்பது எவ்வளவு சுவாரஸ்யமானதோ அதேபோல எங்கே இருந்து படிக்கிறோம் என்பதும் முக்கியம். படிக்க அமர்ந்து இருக்கும் சூழலே நம்மை படிக்க தூண்டுவதாக இருந்தால் அது நிச்சயம் சொர்க்க லோக அனுபவம்தான்.
அப்படி இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் தான் அரகம் . மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளைப் பற்றி ஆராயவும் உதவும் இயற்கை எழில் நிறைந்த பகுதி என்பதால் தான் இந்த இடத்தை நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. புத்தகம் படிக்கும் சூழல் நம்மை லயித்து போக வைக்கவும், சிந்திக்க வைப்பதாகவும் இருப்பது வரமன்றோ?
அந்த வகையில் காஷ்மீரில் அரகத்திற்கு இணையான இடம் இருக்க முடியாது என்றும், காஷ்மீர் இலக்கியம் மற்றும் காஷ்மீரின் வளமான வரலாற்றை ஆராயவும், இந்த கிராமம் சரியான இடமாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடம் புத்தகங்களை ரசிக்கும்போது மாறுபட்ட இயற்கை பாதைகள் நிதானமாக நடப்பது மற்றும் பல மீன்பிடி இடங்களில் அமர்ந்து வாசிப்பது போன்ற கூடுதல் விருப்பங்களை வழங்க இருக்கிறது.
இதைப் பற்றி மேலும் விவரித்த தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரி, புத்தகக் கிராமம் பற்றிய யோசனை புதியது அல்ல. ஆனால் காஷ்மீரின் அழகான கிராமத்தில் அமர்ந்து கலையையும், இயற்கையையும், அதோடு பண்டைய மற்றும் நவீன இலக்கியங்கள், காஷ்மீரின் வரலாறு ஆகியவற்றைப் பெறக்கூடிய ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரவே முயல்கிறோம் என்றும் கூறினார்.
புத்தகங்கள் மட்டுமல்லாது காஷ்மீரின் நாட்டுப்புற கலாச்சாரத்தை மக்களிடம் சேர்க்கும் முயற்சியையும் இந்த திட்டம் எடுத்து வருகிறது. இந்த புத்தக கிராமத்தில் காஷ்மீரின் பண்டைய கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் புதிய மற்றும் பழைய புத்தகங்கள் மக்கள் படிக்கவும் சிந்திக்கவும் இரவலாகக் கிடைக்கும். நடந்துகொண்டே, ட்ரெக்கிங் போய்க்கொண்டே கேட்கும் ஆடியோ புத்தகங்களும் இங்கு கிடைக்கும்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆப்பிள் சுற்றுலா மற்றும் பார்டர் டூரிஸத்தை சர்ஹாத் திட்டமிட்டுள்ளதாகவும், புத்தக கிராமத்தை சுற்றுலா சர்கியூட்களில் ஒருங்கிணைத்து, மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கவும், புத்தக கிராமத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்பவும் NGO முயற்சித்து வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் கிராம கட்டமைப்பில் ஒரு முக்கிய கட்டிடம் உள்ளது. அது இலக்கியவாதிகள் மற்றும் படிக்கும் சமூகத்தின் வழக்கமான பயன்பாட்டிற்காக ஒரு பெரிய நூலகத்தைக் கொண்டிருக்கும். இது ஆரம்பத்தில் உருது, ஆங்கிலம், காஷ்மீரி, இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளில் புத்தகங்களைக் கொண்டிருக்கும். பின்னர் அனைத்து மொழி புத்தகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment